மாவட்ட செய்திகள்

75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

எஸ்.வாழவந்தி அருகே 75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பசுமாடு ஒன்று தவறி விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அந்த பசுமாட்டை மீட்டனர்.

தினத்தந்தி

மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டியைச் சேர்ந்தவர் மலையாளன் (வயது 45). விவசாயி. இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டை நேற்று காலை 10.30 மணியளவில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

அப்போது அவரது வீட்டின் அருகே இருந்த 75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக பசுமாடு கால்தவறி விழுந்து விட்டது. கிணற்றுக்குள் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. பசுமாடு விழுந்ததை அறிந்த மலையாளன் சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்,பக்கத்தினரும், எஸ்.வாழவந்தி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்புச்செழியனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை மீட்பு குறித்து ஆலோசித்தனர்.

பின்னர் இது குறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நிலைய அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை கயிற்றால் கட்டினார்கள். பின்னர் பெரிய ஏணியை கயிற்றுடன் கிணற்றுக்குள் இறங்கினார்கள். அந்த ஏணியின் உதவியுடன் பசுமாட்டை கிணற்றுக்குள் இருந்து வெளியே கயிறு மூலம் இழுத்தனர். சுமார் அரை மணி நேரம் முயற்சிக்கு பிறகு பசுமாட்டை ஏணி உதவியுடன் வெளியே மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டின் உடலில் லேசான சிராய்ப்பு காயங்கள் இருந்தன. அந்த காயத்துக்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை பாராட்டினார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு