மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் குப்பைக்கிடங்கில் 2- வது நாளாக தீயை அணைக்க போராட்டம்

நாகர்கோவில் நகராட்சி குப்பைக்கிடங்கில் தீயை அணைக்க நேற்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராடினார்கள். புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் நகரின் பீச் ரோடு சந்திப்பு பகுதியில் வலம்புரிவிளை குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைக்கிடங்கில் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்படுவதால் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனை சுற்றி தற்போது ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குப்பை கிடங்கால் துர்நாற்றம் வீசுகிறது.

இதுதவிர குப்பைகள் தீப்பிடித்து எரியும் சம்பவமும் அடிக்கடி நடக்கிறது. அவ்வாறு தீப்பற்றி எரியும் போது புகை மூட்டத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த குப்பைக்கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் அதிகாலையில் இந்த குப்பைக்கிடங்கில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த நாகர்கோவில் தீயணைப்பு படையினரும், நகராட்சி ஊழியர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. நேற்று 2-வது நாளாகவும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்தது.

காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த பணி இரவு வரை நீடித்தது. நாகர்கோவில், கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய வாகனங்கள் தீ அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டன. பொக்லைன் எந்திரம் மூலம் குப்பைகள் கிளறப்பட்டு அவற்றில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அவர்களுக்கு உதவியாக நகராட்சி ஊழியர்களும் செயல்பட்டனர். தீயணைப்பு பணிக்கு தேவையான தண்ணீர் நகராட்சியின் 4 லாரிகள் மூலம் சப்ளை செய்யப்பட்டன.

கடுமையான காற்று வீசுவதால் குப்பை கிடங்கில் சில இடங்களில் தீ கொளுந்து விட்டு எரிகிறது. குப்பைகளில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளும் பற்றி எரிவதால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இந்த புகைமூட்டத்தில் சிக்கிய தீயணைப்பு படையினரும், நகராட்சி ஊழியர்களும் தீயணைப்பு பணியின்போது திணறினர். மேலும் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளிலும் புகை சூழ்ந்ததால் பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

நேற்று மாலை வரை தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொண்டும் முழுமையாக அணைக்க முடியவில்லை. இதனால் 3-வது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தீயணைப்பு பணி தொடரும் என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். தீயை அணைக்க நகராட்சியால் போதுமான அளவு தண்ணீர் வழங்க முடியாததும், தீயணைப்பு பணி தாமதத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு