மாவட்ட செய்திகள்

கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது. இதையடுத்து சின்னமுட்டம் துறைமுகம் வெறிச்சோடியது.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

கடலில் மீன்வளத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே, மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனப்பெருக்க காலமாகும். இந்த காலக்கட்டத்தில் ஆழ்கடலில் விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி கப்பல்கள் சென்றால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஏப்ரல் 15ந் தேதி முதல் ஜூன் 14ந் தேதி வரையிலான 61 நாட்கள் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்தது. இதனால் குமரி கிழக்கு கடற்கரை பகுதியை சேர்ந்த கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீனவர்கள் உள்பட ஏராளமான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

சின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். தடைக்காலம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து நேற்று அவர்களது படகுகள் சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீனவர்கள் வேறு எந்த பணியிலும் ஈடுபடவில்லை.

பழுது பார்க்கும் பணி

இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையேற்றி அதை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். பழுது பார்க்கப்படும் படகுகள் வர்ணம் பூசப்பட்டு சீரமைக்கப்படும். மேலும், மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகளையும் சீரமைப்பார்கள்.

மீன்பிடி தடை காலம் தொடங்கி உள்ளதால் சின்னமுட்டம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், மீன்வரத்து குறைவதால் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்கு கடற்கரை

இதேபோல், தமிழகத்தின் மேற்கு கடற்கரை பகுதியான அரபிக் கடலோரம் அமைந்துள்ள குளச்சல் முதல் கேரளா வரையிலான கடல் பகுதியில் ஜூன் 15ந் தேதி முதல் ஆகஸ்டு 14ந் தேதி வரை தடை காலமாக அறிவிக்கப்படும்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்