கோவை,
கேரள முதல்- மந்திரி பினராயி விஜயன் வருகிற 16-ந் தேதி தமிழகம் வருகிறார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் முன்பு நேற்று கருப்பு பலூன்களை பறக்க விட்டு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை தாங்கினார். பினராயி விஜயன் தமிழகத்துக்கு வர எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டம் குறித்து அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கேரள முதல்- மந்திரி பினராயி விஜயன் அய்யப்ப பக்தர்களை கொடுமைப்படுத்தி வருகிறார். அங்கு சன்னிதானத்தில் தங்குவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அய்யப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து தரப்படவில்லை. மாற்று மத பெண்களை 18-ம் படி வழியாக ஏற வைக்கவும் முயற்சி நடக்கிறது. எனவே சபரிமலையில் விதிக்கப்பட்டு உள்ள 144 தடை உத்தரவை விலக்க வலியுறுத்தி தமிழகத்துக்கு வரும் பினராயி விஜயனுக்கு எதிர்ப்பு தெரிவித்து 16-ந் தேதி அன்று தமிழகம் முழுவதும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.
அதற்கு முதற்கட்டமாக அவர் தமிழ்நாட்டுக்கு வராமல் திரும்பிபோக வேண்டும் என்று வற்புறுத்தி கோ பேக் பினராயி விஜயன் என்ற இயக்கத்தை தொடங்கி இருக்கிறோம். ஏற்கனவே முல்லை பெரியாறு விவகாரத்திலும் பினராயி விஜயன் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கடைபிடிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கருப்பு பலூன் பறக்க விடும் போராட்டத்தில், மாநில செயலாளர் செந்தில்குமார், மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி, மாவட்ட தலைவர் மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.