திண்டுக்கல்:
கொரோனா வைரஸ்
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.
தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 270-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, தொற்று பரவலால் அதிர்ச்சியடைந்த திண்டுக்கல் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனை, மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கமலா நேரு அரசு மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கொரோனாவின் கோரப்பிடியில்...
அதன்படி நேற்று கமலா நேரு அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.
இதனால் எங்கே தங்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் போய்விடுமோ? என்ற அச்சத்தில் சமூக இடைவெளியை மறந்து கொரோனாவின் கோர பிடியில் சிக்கும் வகையில் நெருக்கமாக நின்றபடி பொதுமக்கள் காத்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர் என்பது மட்டுமே சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்தது.
பின்னர் மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட வந்தவர்களின் விவரங்களை பதிவு செய்து அவர்கள் விருப்பப்படி கோவேக்சின், கோவிஷீல்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தடுப்பூசியை செலுத்தினர்.
வாக்குவாதம்
இதற்கிடையே தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
இதையடுத்து ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டு 2-வது டோஸ் தடுப்பூசி போட வந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நாங்கள் காலையில் இருந்து நீண்ட நேரம் காத்திருக்கிறோம்.
எங்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று கூறி மருத்துவ குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவருக்கும் நாளை (இன்று) தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறி மருத்துவமனை நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர்.