நெல்லை,
நெல்லையில் முன்னாள் பெண் மேயர் உமா மகேசுவரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று திடீர் விசாரணையில் இறங்கினர். மேலும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் கூறினார்.
நெல்லை மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி ரோட்டை சேர்ந்தவர் முருகசங்கரன் (வயது 71). இவருடைய மனைவி உமா மகேசுவரி. இவர் நெல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது முதல் பெண் மேயராக பதவி வகித்தவர். இவர்களுடைய வீட்டில் அந்த பகுதியில் உள்ள அமுதா பீட் நகரை சேர்ந்த மாரி என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார்.
கடந்த 23-ந்தேதி இவர்களது வீட்டில் புகுந்த மர்ம கும்பல் முருகசங்கரன், உமா மகேசுவரி ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தது. அப்போது வீட்டில் இருந்த பணிப்பெண் மாரியும் அந்த கும்பலால் கொல்லப்பட்டார்.
இந்த கொலைகள் நடந்து 4 நாட்கள் ஆகியும் கொலையாளிகள் யார்? என்பதில் மர்மம் நீடித்து வருகிறது. அதாவது கொலை நடந்த உடன் உமா மகேசுவரியின் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த பணம் காணாமல் போயிருப்பதால் கொள்ளையர்கள் உள்ளே புகுந்து 3 பேரையும் கொலை செய்து விட்டு நகை, பணத்தை திருடிச்சென்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் முதல் கட்ட விசாரணையில் தீவிரமாக இறங்கினர்.
பின்னர் கொலைக்கான உண்மை காரணம் தெரியாமல் இருக்க 3 பேரையும் கொலை செய்து விட்டு நகை, பணத்தை எடுத்து சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே பணத்தகராறு, அரசியல் மற்றும் சொத்து பிரச்சினையில் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
தி.மு.க. கட்சி சாபில் தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் கைமாறியதாகவும், அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் நேற்று முன்தினம் போலீசார் விசாரணையை முடுக்கினர்.
இதுதொடர்பாக மதுரையில் உள்ள தி.மு.க. பெண் பிரமுகர் ஒருவரிடம் விசாரணை நடத்திவிட்டு தனிப்படை போலீசார் நெல்லை திரும்பி உள்ளனர். மேலும், உறவினர்கள் சிலரையும் பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து இருக்கிறார்கள்.
இதுதவிர கொலை நடந்த வீட்டின் அருகே உள்ள ஒரு ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதில் நடந்து சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் போலீசார் பெரும்பாலும் செல்போன் தொடர்பு ஆதாரங்களை முக்கியமாக திரட்டி அதனடிப்படையில் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றனர். இதற்காக சைபர் கிரைம் போலீசார், உமா மகேசுவரி வீடு பகுதியில் உள்ள 4 செல்போன் கோபுரங்களில் இருந்து இணைப்பு பெற்றிருந்த அனைத்து செல்போன் எண்களையும் சேகரித்து ஆய்வு செய்கிறார்கள்.
இதில் சந்தேகப்படும் படியான நபர்களின் செல்போன் எண்ணை அவர்களது முகவரியுடன் எடுத்து தனிப்படை போலீசார் வசம் ஒப்படைத்து வருகின்றனர். அந்த முகவரியை கொண்டு தனிப்படை போலீசார் ஒவ்வொருவரது பின்னணி குறித்தும் விவரங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்துகிறார்கள். இருந்தபோதிலும் இந்த வழக்கில் துப்பு துலங்காமல் மர்மம் நீடித்து வருகிறது.