எட்டயபுரம்,
எட்டயபுரம் பஸ் நிலையம் பின்புறத்தில் ஆட்டு சந்தை உள்ளது. இந்த சந்தை அருகில் பயன்படுத்தப்படாத குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. நேற்று காலை அந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தரையில் நடந்து செல்பவர்கள் மீது கற்கள் விழுந்தன. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது நின்று யாரோ கற்களை வேண்டும் என்றே வீசுவது போல் இருந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது அந்த நீர்த்தேக்க தொட்டிக்குள் ஒருவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோவில்பட்டி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
மீட்டனர்
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, பயன்படுத்தப்படாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறினர். அந்த தொட்டிக்குள் தண்ணீர் இல்லை. வடமாநில வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். உடனே கயிறு கட்டி அந்த வாலிபரை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் ராஜஸ்தானை சேர்ந்த நன்குன் (வயது 30) என்பது தெரிய வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு எட்டயபுரம் பகுதிக்கு வேலை தேடி வந்ததாகவும், தண்ணீர் குடிப்பதற்காக நீர்த்தேக்க தொட்டியில் ஏறிய போது தவறி விழுந்ததாகவும் போலீசாரிடம் அந்த வாலிபர் கூறினார். பின்னர் தொட்டிக்குள் இருந்து மேல ஏற முடியாததால், அங்கு கிடந்த கற்களை எடுத்து வெளியே வீசியதும் தெரிய வந்தது. போலீசார், அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.