திருப்பனந்தாள்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் சிலை பாதுகாப்பு மையம் இயங்கி வருகிறது. இங்கு பந்தநல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகள், வெண்கல சிலைகள், கற்சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழமணக்குடி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான விநாயகர், புஷ்கரணி, வள்ளி, தெய்வானை, சந்திரசேகர அம்மன், திருரெங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான விநாயகர் என 6 சிலைகளை காணவில்லை என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் உள்பட 10 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் கஜேந்திரன், செயல் அதிகாரி காமராஜ், முன்னாள் செயல் அதிகாரி ராமச்சந்திரன், கோவில் தலைமை எழுத்தர் ராஜா ஆகிய 4 பேரை போலீசார் கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் கைது செய்தனர். பின்னர் இவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த நிலையில் பந்தநல்லூரை பூர்வீகமாக கொண்டவரும், சென்னையில் வசித்து வருபவருமான ஆர்.வெங்கட்ராமன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சிலைகளை கடத்துவதற்காக பசுபதீஸ்வரர் கோவிலில் மன்னர் காலத்து பழமை வாய்ந்த சுரங்கம் அழிக்கப்பட்டு இருப்பதாக கூறி இருந்தார். அதன்பேரில் பந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பசுபதீஸ்வரர் கோவிலில் பழமையான சுரங்கத்தை முறையான அனுமதி பெறாமல் அழித்தது, சிலைகள் தொடர்பான ஆவணங்களை மறைத்தது உள்ளிட்டவை தொடர்பாக பசுபதீஸ்வரர் கோவில் தலைமை எழுத்தர் கே.ராஜா, முன்னாள் அறங்காவலர்கள் ஏ.பசுபதிபிள்ளை, பி.மனோகரன், ஜி.மனோகரன், அறநிலையத்துறை அதிகாரிகள் டி.கஜேந்திரன், எஸ்.ஞானசேகரன், மாரியப்பன், ஜீவானந்தம், ஜி.பி.ரவி ஆகிய 9 பேர் மீது பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் இருந்த பழமையான சிலைகள், திருவாச்சி ஆகியவைகளை கடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கோவிலில் உள்ள பழமையான சுரங்கம் அழிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்டு, அதற்கு பதிலாக வேறு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நடத்திய ஆய்வில் 60-க்கும் மேற்பட்ட சிலைகள் கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலைகள் தொடர்பான பல தகவல்களை பதிவேட்டில் பதிவு செய்யாமல், விசாரணை அதிகாரிகளிடம் ஆவணங்கள் பலவற்றை காட்டாமல் மறைத்து விட்டனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.