திருச்சி,
காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தினமும் அதிகாலை 4.45 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு 6.15 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வரும். பின்னர் அந்த ரெயில் திருச்சியில் இருந்து காலை 6.40 மணி அளவில் புறப்பட்டு பகல் 11.50 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சென்று அடையும். நேற்று அதிகாலை வழக்கம்போல் இந்த ரெயில் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு திருச்சி நோக்கி வந்து கொண்டு இருந்தது. திருச்சி கிராப்பட்டியை அடுத்து ஜங்ஷன் மேம்பாலம் அருகே காலை 6.25 மணிக்கு வந்தபோது, திடீரென ரெயில் என்ஜின் பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே என்ஜின் டிரைவர் முருகன், உதவியாளர் சிவா ஆகியோர் பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினர். அதன்பிறகு அவர்கள் கீழே இறங்கி பார்த்தனர். அப்போது என்ஜின் தடம் புரண்டு இருந்தது. என்ஜினின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி நின்றன. தண்டவாளத்தின் இடதுபுறம் விரிசல் ஏற்பட்டு துண்டாகி இருந்தது. இதன் காரணமாக தான் என்ஜின் தடம் புரண்டது தெரியவந்தது. பல்லவன் எக்ஸ்பிரஸ் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை நெருங்கி விட்டதால் ரெயில் நிலையத்தில் நிறுத்துவதற்கு வசதியாக ரெயில் மெதுவாக இயக்கப்பட்டது. அந்தசமயத்தில் என்ஜின் தடம் புரண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த திருச்சி கோட்ட துணை பொதுமேலாளர் ஹரிஷ் மற்றும் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், ரெயில்வே பாதுகாப்புபடை அதிகாரிகள் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர். தடம் புரண்ட ரெயில் சக்கரங்களை அதிநவீன ஹைட்ராலிக் ஜாக்கி மூலம் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் ரெயில் புறப்பட தாமதமானது. அவசரமாக வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். ஒரு சில பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று பஸ்களில் தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதையடுத்து தடம் புரண்ட ரெயில் என்ஜினை நீண்டநேரம் போராடி மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது.
பின்னர் அந்த என்ஜினுக்கு பதிலாக மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு ரெயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து ரெயிலை மெதுவாக இயக்கி கொண்டு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்குள் வந்து நிறுத்தினர். அங்கு பயணிகளை ஏற்றி கொண்டு காலை 9.50 மணிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் சென்னை புறப்பட்டு சென்றது. இதனால் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணிநேரம் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.