மாவட்ட செய்திகள்

அரிவாளை காட்டி நீதி கேட்டு வெளியான வீடியோவால் பரபரப்பு தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது

தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் தலைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது செய்யப்பட்டார். தனக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர்களை கைது செய்யும்படி அரிவாளை காட்டி நீதிகேட்டு அவர் பேசிய ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாம்பரம்,

தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் நிறுவன தலைவராக இருந்து வருபவர் வீரலட்சுமி(வயது35). இவர், சென்னை ராமாபுரம், ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருகிறார்.

இவர், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு காரில் அனகாபுத்தூர் நோக்கி சென்றபோது, அவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஆபாச வீடியோக்கள் வந்தது. இது சம்பந்தமாக, பரங்கிமலை துணை கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அந்த புகார் சங்கர் நகர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபாச வீடியோ அனுப்பியவர் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் தேர்தல் நாள் அன்று, தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை கண்டுபிடிக்காததை கண்டித்து, சென்னை விமான நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டியுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி வீரலட்சுமி போராட்டம் நடத்தினார்.

அரிவாளுடன் வீடியோ

அதைதொடர்ந்து மேலும் சிலர் அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்ந்து ஆபாச வீடியோக்கள் அனுப்பி வந்தனர். சிலர் வீடியோ காலிலும் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்து இருந்தார்.

இந்தநிலையில் வீரலட்சுமி கையில் அரிவாளை வைத்துக்கொண்டு தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைக்கு நீதி கேட்டு சில நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் ஆபாச வீடியோ அனுப்பியவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருந்தார்.

அந்த வீடியோவில், எனக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர்கள் 15 நாட்களில் கோர்ட்டிலோ, போலீசிலோ சரண் அடைந்து விடுங்கள். இல்லை என்னிடமோ, என் தொண்டர்களிடமோ சிக்கினால் வெட்டிவிடுவேன். சட்டசபை தேர்தல் நேரத்தில் வந்த ஆபாச வீடியோ குறித்து பரங்கிமலை துணை கமிஷனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பிறகும் ஆபாச வீடியோக்கள் வந்ததால் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். அதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பிறகு வீடியோ காலில் நிர்வாணமாக நின்று பேசுறீங்க. எனக்கு பணம் பலம், ஆள் பலம் உள்ளது. தமிழ் பெண்கள் மானம் என்ன அவ்வளவு கேவலமா?. தமிழக அரசு இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக பேசி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

ஒருவர் கைது

இந்தநிலையில் வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் குறித்து சங்கர் நகர் போலீசார் நடத்திய விசாரணையில், அவருக்கு ஆபாச வீடியோ அனுப்பியது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா, கரைமேடையை சேர்ந்த ஆரோக்கியசாமி(36) என்பது தெரிந்தது. கேரளாவில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

இதுதவிர மேலும் சில வாட்ஸ் அப் எண்களில் இருந்தும் தனக்கு ஆபாச வீடியோக்கள் வந்ததாக வீரலட்சுமி கூறி இருந்தார். அவர்கள் யார்? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்