தாளவாடி
தாளவாடியை சேர்ந்தவர்கள் மணி, மாதேவா, சபியுல்லா. இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள திப்பு சர்க்கிள் பகுதியில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மற்றொரு தரப்பை சேர்ந்த 3 பேர் மோட்டார்சைக்கிளில் வந்து உள்ளனர். மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் மணி, மாதேவா, சபியுல்லா ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்து மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரும் சேர்ந்து மணியை தாக்கி உள்ளனர். இதில் மணி காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் மணியை மீட்டு தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இரு தரப்பினர் இடையே கலவரம் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் உருட்டு கட்டையால் தாக்கி கொண்டனர். எனவே இதுபோன்று நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறால் மீண்டும் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கயல்விழி தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சந்தானபாண்டியன், துணை சூப்பிரண்டுகள் பழனிச்சாமி (சத்தியமங்கலம்), செல்வம் (கோபி), ரமேஷ் (மதுவிலக்கு பிரிவு) மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தாளவாடியில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.