மாவட்ட செய்திகள்

சேலத்தில் உள்ள ரவுடிகள் ஊரை விட்டு வெளியேற வேண்டும் போலீஸ் துணை கமிஷனர்கள் உத்தரவு

சேலத்தில் உள்ள ரவுடிகள் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்று போலீஸ் துணை கமிஷனர்கள் தங்கதுரை, சுப்புலட்சுமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

சேலம்,

சேலம் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ரவுடிகள் அட்டகாசம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. தொழில் அதிபர்கள், பொது மக்களை மிரட்டி பணம் பறித்தல், வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை அடித்தல், கற்பழிப்பு சம்பவங்களும் ரவுடிகளால் நடக்கிறது. இந்த குற்ற செயல்களை தடுக்க சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலத்தில் உள்ள ரவுடிகள் பட்டியலையும், தற்போது அவர்கள் எங்கு வசிக்கின்றனர் என்ற விவரங்களையும் சேகரிக்க உத்தரவிட்டார். இதன்படி சேலம் மாநகரில் உள்ள ரவுடிகளின் பட்டியலை போலீசார் தயாரித்தனர். இந்த பட்டியலில் கோரிமேடு, ஜான்சன்பேட்டை, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரவுடிகள் அதிகம் இருப்பது தெரியவந்தது. பின்னர் ரவுடிகள் வசிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

இதன்படி போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று காலை அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மணக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ரவுடிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரவுடி கரிகாலன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரது மனைவியிடம் விசாரித்தனர். அதற்கு அவர் தனது கணவர் தற்போது பெங்களூருவில் சட்டப்படிப்பு படித்து வருகிறார் என்று கூறினார். இதே போன்று 10-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் போலீசார் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வள்ளுவர் நகர், பாண்டி நகர், காத்தாயம்மாள் நகர், கொண்டலாம்பட்டி, பாப்பநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ரவுடிகள் மீது உள்ள வழக்குகளை விரைந்து முடித்துக்கொள்ள வேண்டும், மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். இந்த விசாரணையின் போது பாண்டி நகரை சேர்ந்த ரவுடி அறிவு என்பவர் வீட்டில் இருந்தார். அவரிடம் விசாரித்த போது தற்போது நான் எந்த வித குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என்று கூறினார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் எச்சரித்தனர்.

இந்த விசாரணையின் போது இரவு நேரங்களில் ரவுடிகள் சாலையில் நின்றபடி மது அருந்துகின்றனர் என்றும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்றும் பொதுமக்கள் போலீசாரிடம் கூறினார். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். பின்னர் துணை கமிஷனர்கள் தங்கதுரை, சுப்புலட்சுமி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

சேலத்தில் 15-க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 54 ரவுடிகள் உள்ளனர். 10-க்கும் கீழ் உள்ள குற்றசம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் பலர் உள்ளனர். அதன்படி ரவுடிகளின் குடும்பத்தினரை பார்த்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம். ரவுடிகள் திருந்தி வாழ வேண்டும்.

அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். சில ரவுடிகள் திருந்துவது போல் நடித்துக்கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். திருந்த வேண்டும். இல்லை என்றால் ரவுடிகள் ஊரை விட்டு வெளியேற வேண்டும். சேலம் மாநகரில் ரவுடிகள் அட்டகாசம் ஒழிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்