ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னகாளியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் வாய்க்கால் வசதி செய்து தரவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று திரண்டு வந்து பிச்சம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அழைத்து ஊராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தெருவில் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்கு தேவையான இடம் வேண்டும். பொதுமக்கள் இடம் கொடுத்தால் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தரப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.