கோத்தகிரி
தமிழகத்தில் குறைந்து இருந்த கொரோனா பரவல், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
முதலில் முன்கள பணியாளர்களுக்கு, முதியவர்களுக்கு, இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி போடப்படுகிறது.
அதன்படி கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, இங்கு தினமும் 45 வயதுக்கு மேற்பட்ட 100 முதல் 150 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமுடன் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதன் மூலம் விரைவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் என்றனர்.