மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத்தெரு பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேல். இவர் மன்னை நகர் பகுதியில் பாமணி ஆற்றங்கரையோரம் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தார். இங்கு கடந்த மார்ச் 27-ந்தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உரிமையாளர் சிங்காரவேல் (வயது60), அவருடைய உறவினர் வீரையன் (80) மற்றும் பணியாளர்கள் மோகன் (55), பாபு (45), அறிவுநிதி (28), சுரேஷ் (40) ஆகிய 6 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். மேலும் வெளிப்பகுதியில் இருந்த ஷேக் (25), முத்து (55), சோமசுந்தரம் (55) ஆகிய 3 பேரும் பலத்த தீக்காயமடைந்தனர்.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறை சார்பில் நேற்று திருவாரூர் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் தலைமையில், மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். மேலும் சம்பவத்தை பார்த்த பொதுமக்கள், அருகில் வசிப்போர் ஆகியோரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இதில் மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, தாசில்தார் ஸ்ரீதேவி சிவானந்தம் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். விசாரணை அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், பின்னர் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும் என்றும் மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்தார்.