வசாய்,
பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா பட்டன்கர் பார்க் பகுதியை சேர்ந்தவர் ரேகா. இவரது மகன் பிபுல்(வயது14). இருவரும் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தனர். இதன்பின்னர் வீட்டிற்கு வந்து கதவை திறந்தபோது, பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்தனர்.
அப்போது, கொள்ளையர்கள் 2 பேர் வீட்டிற்குள் நின்றுகொண்டிருந்தனர். இதனால் தாய், மகன் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் ரேகா பயப்படாமல் சத்தம்போட்டபடி கொள்ளையர்களில் ஒருவரை மடக்கி பிடித்தார். அப்போது, மற்றொரு கொள்ளையன் ரேகாவை தாக்க முயன்றான்.
இதனைக்கண்ட சிறுவன் பிபுல் அந்த கொள்ளையனுடன் துணிச்சலுடன் சண்டையிட்டு உள்ளான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரேகாவிடம் பிடிபட்ட கொள்ளையன் தப்பிச்செல்ல முயன்றான். இருப்பினும் ரேகா அவனை தப்பவிடாமல் பிடித்துக்கொண்டார்.
இதற்கிடையே சிறுவன் பிபுலிடம் சண்டையிட்ட கொள்ளையன் அவனை தள்ளிவிட்டு வெளியே தப்பிஓட்டம் பிடித்தார். அப்போது சிறுவன் திருடன்...திருடன்...என சத்தம் போட்டான். அவனது சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தப்பிஓடிய கொள்ளையனை மடக்கி பிடித்தனர்.
பின்னர் கொள்ளையர்கள் இருவரையும் சரமாரியாக அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.82 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கொள்ளையர்கள் இருவரும் டெல்லி, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இவர்கள் மும்பை உள்பட தானே, நவிமும்பை பகுதிகளில் வீடுகளில் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.
துணிச்சலுடன் போராடி கொள்ளையர்களை பிடித்த ரேகா மற்றும் சிறுவன் பிபுல் இருவரையும் போலீசாரும், அப்பகுதி மக்களும் வெகுவாக பாராட்டினார்கள்.