நொய்யல்,
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் சாலையோர கடைகளில் விற்கப்படும் நுங்கு, இளநீர், கரும்புச்சாறு மற்றும் சர்பத் உள்ளிட்டவற்றை அருந்தி தங்களின் தாகத்தை தணித்துக்கொள்கின்றனர். தர்ப்பூசணி வெயில் காலத்தில் சாப்பிட உகந்தது. இதில் அதிக அளவில் நீர் உள்ளதால் பொதுமக்கள் வாங்கி தங்களின் தாகத்தை தணிக்கின்றனர். தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் தர்ப்பூசணி விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
கிலோ ரூ.16
கரூர் மாவட்டம் நடையனூர் அருகே கரைப்பாளையம் ஆலமரத்துமேட்டு பகுதியில் தர்ப்பூசணி விற்பனை செய்து வருகின்றனர். கிலோ ரூ.16-க்கு விற்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு பழம் 5 கிலோ வரை எடை உள்ளது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் தர்ப்பூசணியை விரும்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர். இது குறித்து தர்ப்பூசணி விற்பனையாளர்கள் கூறுகையில், தற்போது அதிக அளவு வெயிலின் கொடுமையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பழ வகைகளை உண்டு தங்களின் தாகத்தை தணித்துக்கொள்கின்றனர். குறிப்பாக தர்ப்பூசணியை அதிக அளவில் வாங்கி விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் தர்ப்பூசணி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மேலும் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். இதனால் தர்ப்பூசணி விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றனர்.