ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பல ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியில் போதுமான வகுப்பறை கட்டிட வசதி இல்லை.
பள்ளியில் எல்.கே.ஜி. மற்றும் 5-ம் வகுப்பு கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. இதையடுத்து அந்த வகுப்பு அறை கட்டிடங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டன. பள்ளியில் புதிய கட்டிடங்கள் கட்டும் வரை 5-ம் வகுப்பை காளியம்மன் கோவிலில் நடத்துவது என்று கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர்.
இதுவரை புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான எந்த பணியும் தொடங்கவில்லை. வகுப்பறைகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.