ஏரல்,
ஏரல் நகர பஞ்சாயத்து பகுதியில் நேற்று காலையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது நகர பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் முத்து கிருஷ்ணன் (ஏரல்), முருகேசன் (நாசரேத் பொறுப்பு), முருகன் (ஆழ்வார்திருநகரி) தலைமையில் ஊழியர்கள் மற்றும் ஏரல் போலீசார் அடங்கிய குழுவினர் வீடு வீடாக சென்று திடீர் சோதனை நடத்தினர். இதில் 13 வீட்டு குடிநீர் இணைப்புகளில் முறைகேடாக மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சியது தெரிய வந்தது. அந்த குடிநீர் இணைப்புகளை நிரந்தரமாக துண்டித்து விட்டு, 13 மின் மோட்டார்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, நகர பஞ்சாயத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.