மாவட்ட செய்திகள்

இருமுனையிலும் கூரிய கத்தி, ‘இணையம்’

மனித மூளையானது எல்லாத் தகவல்களையும் சேகரித்து தன்னகத்தே அழியாமல் பாதுகாக்கக்கூடியதல்ல. இதன் காரணமாக, நம்முடைய ஞாபக மறதிகளுக்கான மருந்தாக வாய்த்திருக்கின்றன, இணைய தேடுபொறிகள்.

வக்கீல் மு.பிறவிபெருமாள்

எதுவானாலும் கூகுளில் தேடினால் கிடைக்கும் என்கிற அளவு நம்பிக்கையை அந்நிறுவனம் மக்களிடையே, பல்வேறு துறை சார்ந்தவர்களிடையே ஏற்படுத்துகிறது. உள்ளங்கைகளில் உலகத்தையே அடக்கிய இணையத் தந்தையாக ஜே.சி.ஆர்.லிக்லைடர் என்பவரை அழைக்கின்றனர். இந்த அரிய கண்டுபிடிப்புக்கு வித்திட்டவர்கள் பிரித்தானிய நாட்டு அறிஞர்களான சார்லஸ் காவ், ஜார்ஜ்ஸ் ஹாக்மேன் ஆகியோர் ஆவர்.

இணையத்தை தனி மனிதனோ அல்லது குழுவோ கட்டுப்படுத்துவதில்லை எனினும் இணையத்தினை வழி நடத்த இணையக்கழகத்தை கணினி வல்லுநர்கள் லாப நோக்கமின்றி நடத்திவருகின்றனர். அவற்றுள் ஐ.ஏ.பி. (இன்டர்நெட் ஆர்க்கிடெக்ட் போர்டு) என்பது கணினிகளை இணையத்தில் இணைப்பதற்கான வரையறு ஆகும். இணையத்தில் இணைந்துள்ள கணினிகளுக்கு முகவரிகளை இது வழங்குகிறது. மேலும் தேவைப்படுகின்ற நேரங்களின் தேவைக்கேற்ப வரையறுகளை மாற்றி அமைக்கும் பணியையும் இக்கழகம் செய்கிறது. ஐ.இ.டி.பி. (இன்டர்நெட் என்ஜினீயரிங் டெஸ்ட் போர்ஸ்) என்பது கணினியின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் அதனால் இணையத்தில் ஏற்படுத்த வேண்டிய மாறுதல்கள் குறித்தும் முடிவு செய்கிறது. இணைய விதிமுறைகளைக் கண்காணிப்பதற்காக தி இன்டர்நெட் சொசைட்டி ஓவர்சீஸ் பார் தி டெவலப்மென்ட் ஆப் தி இன்டர்நெட் என்ற அமைப்பும் இணைய தளங்களை மேற்பார்வையிடுவதற்காக வேர்ல்டு வைடு வெப் கன்சோர்டியம் என்ற அமைப்பும் செயல்பட்டு வருகின்றன.

இன்றைய காலக்கட்டத்தில் இணையம் என்ற ஒற்றைச் சொல் இந்த உலகத்தினையே ஆட்டுவிக்கின்றது. இணையமென்ற மாபெரும் சக்தியை, மக்கள் சக்தியாக்கி மகத்தான வெற்றிகளை சமகாலத்தில் பலநாட்டு சாமானிய மக்களும் அனுபவித்துக்கொண்டு வருகின்றனர். நமது இணைய செயல்பாடுகளான குழும விவாதங்கள் மற்றும் வலைத்தளம் ஊடாகவே இன்னும் விரிவாகி, சமூக பொதுத்தளங்களான பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் வரையிலுமாக செயல்பட்டு வருகின்றோம்.

வானொலி 5 கோடி மக்களைச் சென்றடைய 32 வருடம் ஆனது. தொலைக்காட்சி 5 கோடி மக்களைச் சென்றடைய 13 வருடமானது. மடிக்கணினி 5 கோடி பேரை நெருங்க 5 வருடமானது. ஆனால் இரண்டே வருடங்களில் முகநூல், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் 5 கோடி மக்களைச் சென்றடைந்துவிட்டன.

சமீப ஆண்டுகளில் டுவிட்டர், பேஸ்புக் தளங்களில் நடைபெற்ற விரைவான தகவல் பரிமாற்றங்களின் காரணமாய் எகிப்து, துனீஷியா முதலான சில நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவிலும் சமூகவலைத்தளங்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த மெரினா புரட்சியை சொல்லலாம்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சமாக இருக்கிறது. வரும் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24 கோடியே 30 லட்சத்தைத் தொட்டுவிடும் என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்க ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் இந்தியா அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். தற்போது சீனா 30 கோடி பயனாளிகளோடு முதல் இடத்திலும், அமெரிக்கா 20 கோடியே 70 லட்சம் பயனாளிகளோடு 2-வது இடத்திலும் உள்ளன.

தனிமனித உரையாடல் கிட்டத்தட்ட மறைந்துவரும் சமூகத்தில், முக்கியமாக இளைஞர்களுக்கு அதற்கான வடிகாலாக இணையம் மாறியிருக்கிறது. மணிக்கணக்கில் நேரத்தை இணையத்தில் செலவிடும் இளைஞர்களின் மனப்போக்கில் இதை எளிதாக அறியமுடியும். உலக அளவில் சமூகவலைத்தளங்களுள் முதன்மையானதாக கருதப்படும் முகநூலை (பேஸ்புக்) அதிகம் பயன்படுத்தும் உலக நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது. வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாட்களை இந்த தொழில்நுட்ப வசதியோடு இருக்கும் இடத்திலிருந்தே நேர்காணல் நடத்தி தங்களுக்கு தேவையானவர்களை தேர்ந்தெடுக்கின்றன. வீட்டிலிருந்தபடியே இணையம் வழியாக அலுவலகப்பணிகளை முடித்துவிடுவோரின் எண்ணிக்கையும் நாள்தோறும் சத்தமில்லாமல் அதிகரித்து வருகிறது. ஊழியர்களுக்கு காலம், பணம், பயண அலைச்சல் மிச்சமாவதுடன் மனநிறைவும் ஏற்படுகிறது.

யார் வேண்டுமானாலும் எழுதலாம். எந்தப் பிரிவின் கீழும் எழுதலாம். நாமே அதனை வெளியிடலாம். நம்முடைய கருத்துகளுக்கு, பதிவுகளுக்கு உடனடியாக எதிர்வினையைப்பெறலாம். இணைய வழிக்கற்றல் பெருகத்தொடங்கியிருப்பதன் மூலம், மாணவர்களுக்கும், கற்றலின்பால் ஆர்வங்கொண்ட பலருக்கும் இணையம் ஆசானாக விளங்கத்தொடங்கியிருக்கிறது. வணிக ரீதியாகவும் இணையத்தினை பயன்படுத்தி லாபம் ஈட்ட முடியும். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, பிரபல அமெரிக்க மின்வணிக நிறுவனமான அமேசான் ஆளில்லா விமானங்களின் மூலம் பொருட்களை அனுப்பி வைக்கும் முறையை பரிசீலித்து வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சமூகத்தில் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகம் இருந்தாலும் அதனை முறையோடும் கட்டுப்பாடோடும் பயன் படுத்தத் தவறும் பட்சத்தில் பல கஷ்டங்கள், சிரமங்கள், நஷ்டங்களை ஏற்படுத்தி விடுகிறது என்பதும் நிதர்சனமான உண்மை. இளைஞர் சமுதாயத்தில் பலரை தற்பெருமை மிக்கவர்களாக உருவாக்குகின்றது. வங்கிகளில் நம் அடையாளத்தை உறுதிசெய்து கொள்ள பயன்படுத்தும் பிறந்த நாள், மற்றும் பலவித இரகசியம் பேணப்படவேண்டிய தகவல்களையும் பொதுவில் வைத்து விடுகின்றோம். இதனால், தகவல் திருட்டு மூலம் பலவிதமான இழப்புகள் ஏற்பட காரணமாக அமைகின்றது.

இந்த சமூக வலைத்தளங்கள் புகை பிடித்தல் போன்று மாணவர்களை தம்வயப்படுத்தி, அவர்களின்அன்றாட நிகழ்வுகளிலிருந்தும் பிரித்து வைக்கின்றன. சிலர் அன்றாட நிகழ்வுகளை பகிர்தல் மூலம், தீயவர்கள் பலவித மோசடிகள் செய்கின்றனர். ஒருவீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதை ஆராய்ந்த காவல் துறையினர், கொள்ளை அடித்தவர்களை கண்டுபிடித்து விசாரணை செய்கையில், அந்த வீட்டுப் பெண், சமூக வலைத்தளத்தில் தாங்கள் விடுமுறை சுற்றுப்பயணம் செல்வதாகவும், குறிப்பிட்ட சில தினங்களுக்கு வெளியூரில் இருப்பதாக பகிர்ந்திருந்தையும் வைத்து, அந்த வீட்டில் யாரும் இருக்க வழியில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, கொள்ளை அடித்தோம் என்பதாக கூறியுள்ளனர்.

உலகம் முழுவதும் சிறுவர்கள், இளைஞர்கள் உயிரிழப்புக்கு காரணமாக திகழும் ப்ளூ வேல் சேலஞ்ச் இணையத்தின் மற்றொரு கொடூர முகம் என்பதினை நாம் யாரும் எளிதில் மறந்து விடமுடியாது. இணையம் என்பதை நல்லவிதமாக அணுகினால், அது நன்மையை மட்டுமே பயக்கிறது. அதை ஆயுதமாகக் கருதினால் அழிவையே தந்துவிடும். சமூகத்தின் பார்வையில் இணையம் இருமுனையிலும் கூரான கத்தியாகவே பெரும்பாலும் அணுகப்படுகிறது. அப்படியே வைத்துக் கொண்டாலும், அதை பாதுகாப்பாக கையாளுபவர்களுக்கு யாதோர் அழிவுமில்லை.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு