தூத்துக்குடி,
மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் அரிய வகை உயிரினங்கள் உள்ளன. இந்த உயிரினங்களை வேட்டையாடாமல் தடுக்கும் வகையில் மன்னார்வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று கடற்கரையோரங்களில் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே கடற்கரையில் அரிய வகை திமிங்கல சுறா மீன் இறந்த நிலையில் ஒதுங்கி கிடந்தது.
மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனவர் சோனை, வனகாப்பாளர் சடையாண்டி மற்றும் வேட்டை தடுப்பு காப்பாளர்கள் கடற்கரையில் ஒதுங்கி கிடந்த மீனை ஆய்வு செய்தனர். இந்த திமிங்கல சுறாமீன் சுமார் 1 டன் எடையும், 4 மீட்டர் நீளமும் இருந்தது. இதன் மேல்பகுதி கருப்பு நிறத்திலும், அதில் சிறிய வெள்ளை நிற புள்ளிகளும் காணப்பட்டன. இதன் வால் பகுதி இரண்டாக பிரிந்த துடுப்புடன் காணப்பட்டது.
இந்த வகை சுறா மீன் வேட்டையாடாது. இதனால் வாய் தட்டையாகவும், பற்கள் இல்லாமலும் இருக்கும். இவை தண்ணீரை வாய்க்குள் உறிஞ்சும். அதில் உள்ள சிறிய உயிரினங்களை வடிகட்டி உணவாக உட்கொள்ளக்கூடியவை. ஆழ்கடல் பகுதியில் வசிக்கக்கூடியது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் அரியவகை உயிரினத்தில் இதுவும் ஒன்றாகும்.
சுறா மீனில் எந்த வித வெளிக்காயங்களும் இல்லாமல் இருந்தது. இதனால் சுறாமீன் வழிதவறி ஆழம் குறைந்த பகுதிக்கு வந்து இருக்கலாம். மீண்டும் கடலுக்கு செல்ல முடியாமல் இறந்து கரையில் ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதன்பிறகு தூத்துக்குடி கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டார். சம்பவ இடத்திலேயே திமிங்கல சுறாமீன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அங்கு கடற்கரையோரத்தில் புதைக்கப்பட்டது.