மாவட்ட செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை ரூ.23¾ கோடி விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

கரும்பு விவசாயிகளுக்கான மொத்த நிலுவைத்தொகை ரூ.23¾ கோடி விரைவில் அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்க்கரை கழக மேலாண்மை இயக்குனர் ரீட்டா ஹரீஷ்தக்கர் தெரிவித்தார்.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் 43-வது பேரவை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ரீட்டா ஹரீஷ்தக்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகையான டன் ஒன்றுக்கு ரூ.200 வீதம் 2017-2018-ம் ஆண்டு அரவைப் பருவத்தில் 2,298 விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 61 லட்சத்து 73 ஆயிரத்து 425 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

2016-17-ம் ஆண்டு அரவைப் பருவத்தில் கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்பிற்கு கொடுக்கப்பட வேண்டிய மாநில அரசின் பரிந்துரை விலையான டன் ஒன்றுக்கு ரூ.450 வீதம் ரூ.11.79 கோடியும், 2015-2016-ம் ஆண்டு அரவைப் பருவத்தில் மாநில அரசின் பரிந்துரை விலையான டன் ஒன்றுக்கு ரூ.450 வீதம் ரூ.12.07 கோடியும் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன் மொத்த நிலுவைத்தொகையான ரூ.23.86 கோடியை தமிழக அரசிடமிருந்து வழிவகை கடனாக பெற்று கரும்பு விவசாயிகளுக்கு வழங்க ஆணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்தொகையினை விவசாயிகளுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த மாதம் 15-ந்தேதி வீசிய கஜா புயலால் குருங்குளம் சர்க்கரை ஆலையின் மேற்கூரைகள், எந்திரங்கள் மற்றும் இணை உற்பத்தி நிலையம் பாதிப்படைந்தது. அதன் காரணமாக ஏற்கனவே திட்டமிட்ட நாளான கடந்த 6-ந் தேதி ஆலையில் அரவைப் பணி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. எனினும், பாதிப்புகள் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிற 20-ந் தேதி முதல் ஆலையில் அரவைப்பணி தொடங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

முன்னதாக கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் சிலர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய இழப்பீடும், நிவாரண உதவிகள் வழங்கப்படாததை கண்டித்தும், கரும்புக்கான நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷமிட்டனர். மேலும் அவர்கள் கூட்டத்தில் வெளிநடப்பு செய்து நிகழ்ச்சி நடந்த மண்டபம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசாரும், அதிகாரிகளும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நிகழ்ச்சி நடைபெற்ற திருமண மண்டப வளாகத்தில் வேளாண் கருவிகள், கரும்பு சாகுபடி தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை விவசாயிகளும், பொதுமக்களும் பார்வையிட்டனர். கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு சர்க்கரை ஆலை கழக இயக்குனர் பாலாஜி, ஆளுனரின் பிரதிநிதி சரவணக்குமார், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜனனி சவுந்தர்யா, செயலாளர் அனுராதா பொன்ராஜ், தமிழ்நாடு சர்க்கரை கழக அதிகாரிகள் முத்துவேலப்பன், சுப்ரமணியன், மாமுண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு