அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் சோழமாதேவி ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் மாட்டு வண்டியில் திரண்டு வந்து கலெக்டர் (பொறுப்பு) தனசேகரனிடம் மனு கொடுத்தனர். அதில், சோழமாதேவி வழியாக பல்வேறு ஊர்களை கடந்து கும்பகோணத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அணைக்கரை பாலம் பழுதடைந்ததால் இவ்வழியாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பாலம் சீரமைக்கப்பட்ட பிறகும் அரசு பஸ்கள் சோழமாதேவி வழியாக இயக்கப் படாததால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சோழமாதேவி வழியாக அரசு பஸ் இயக்க கோரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தனர்.
இதேபோல், திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியை சேர்ந்த கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் குடி யிருப்பு பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப் பிருக்கிறது. எனவே டாஸ்மாக் கடை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என்று கூறி யிருந்தனர்.
டிராக்டர் கடனை கட்டிய பிறகும் ஒரு தனியார் வங்கியில் வட்டி கேட்டு தொந்தரவு செய்வதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விக்கிரமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகராஜன் (வயது 65) மனு கொடுத்திருந்தார். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.