தர்மபுரி,
தர்மபுரி அருகே உள்ள மொன்னையன்கொட்டாய் பகுதியில் புதிய மதுக்கடை அமைக்கப்பட்டது. இந்த மதுக்கடையை அகற்றக்கோரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 8-வது நாளாக மதுக்கடை முன்பு பெண்கள் திரண்டனர்.
அங்கு உருவ பொம்மையை வைத்து அதற்கு மாலை அணிவித்தனர். பின்னர் உருவபொம்மையை மதுப்பழக்கத்தால் இறந்தவரின் உடலாக பாவித்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டம் நடைபெற்ற பகுதியில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், 8 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்று இங்கே அமைக்கப்பட்டுள்ள புதிய மதுக்கடையை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம், என்று தெரிவித்தனர்.