சீர்காழி,
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் விளக்குமுகத்தெருவில் முடவன்வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியின் வடிகால் வாய்க்காலாக இருந்து வருகிறது. வாய்க்கால் தூர்வாரப்படாததால் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் மழைநீர் வடிய வழியில்லாமல், வெள்ளநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாய்க்கால் தூர்வாரப்பட்டது. இந்த நிலையில் தற்போது வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் மற்றும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்போல காட்சி அளித்தது. இதனால் அப்பகுதி மக்கள் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் பாஸ்கரன், பட்டியல் எழுத்தர் நடராஜன், வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் ஆகியோர் முடவன்வாய்க்காலை நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் செடி-கொடிகளை அகற்றும் பணி நடைபெற்றது.
மேலும், தற்போது மழை காலமாக இருப்பதால் தாழ்வான பகுதியில் குடியிருந்து வரும் அப்பகுதி பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தினர். அப்போது பேரூராட்சி பணியாளர்கள் சுப்பிரமணியன், முத்து, பாஸ்கர், சபரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.