மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவில் அச்சு முறிந்து தேர் சாய்ந்தது பூசாரி உள்பட 3 பேர் காயம்

செந்துறை அருகே கோவில் திருவிழாவில் தேரின் அச்சு முறிந்ததில் தேர் சாய்ந்தது. இதில் பூசாரி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இலுப்பை மரத்தால் பெரிய தேர் இருக்கிறது. இந்தநிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவில் தேர் சேதமடைந்து, நிலையத்தில் நின்றபடியே இருந்தது.

அதன் பின்னர் பொதுமக்களின் முயற்சியால் கடந்த 2010-ம் ஆண்டு தேருக்கு புதிய சக்கரம் பொருத்துதல், பழமை மாறாமல் தேரை புதுப்பித்தல் ஆகிய பணிகள் நடந்தன. இதனால் அந்த தேர் ராட்சத சக்கரங்களுடன் கம்பீரமாக காட்சியளித்தது. பக்தர்களும் கோவிலுக்கு வரும்போதெல்லாம் இந்த தேரினை தொட்டு வணங்கி சென்று வருகின்றனர். அதனை தொடர்ந்து ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நல்லாம்பாளையம் கிராமத்தில் தேர்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

தேர் திருவிழா

அந்த வகையில் இந்த ஆண்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதன் பின்னர் தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருளியவுடன், பக்தர்களின் வெள்ளத்தில் தேர் அசைந்தாடியபடி சென்றது. பூசாரி மற்றும் மேள-தாளம் இசைப்பவர்கள் என 4 பேர் தேரின் மீது அமர்ந்திருந்தனர். கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நிலையத்திலிருந்து புறப்பட்ட தேர், செந்துறை மெயின்ரோடு வழியாக வந்து திரவுபதி அம்மன் கோவிலை கடந்து, மடத்து தெருவை அடைந்தது.

தேர் சாய்ந்ததில் 3 பேர் காயம்

அப்போது பக்தர்கள் ஆர்வத்துடன் வேகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனால் தேர் அதிவேகத்தில் சென்றது. இதையடுத்து சில பக்தர்கள் தேர் சக்கரத்தின் அடியில் கட்டையை போட்டு அதனை நிறுத்த முற்பட்டனர். அப்போது தேரின் முன்பக்க சக்கரங்களில், ஒரு சக்கரத்தின் அச்சு முறிந்தது. இதனால் தேர் கட்டுப்பாட்டை இழந்து மெல்ல மெல்ல முன்பக்கமாக சாய தொடங்கியது. இதனால் தேரை இழுத்து கொண்டிருந்த பக்தர்கள் வடத்தை கீழே போட்டு விட்டு, அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

அப்போது தேரின் மீது அமர்ந்திருந்தவர்கள் உயிர்பயத்தில் என்ன செய்வதென்று தெரியாது திகைத்து நின்றனர். இந்தநிலையில் அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் மீது உரசியபடி தேர் முன்பக்கமாக சாய்ந்து கீழே விழுந்தது. இந்த திடீர் விபத்தில் தேருக்குள் அமர்ந்திருந்த நல்லாம்பாளையத்தை சேர்ந்த பூசாரி அமிர்தலிங்கம் மற்றும் தேரின் அருகில் நின்ற பக்தர்கள் சகாதேவன், ஆனந்தன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். தேரில் மேளம்-தாளம் இசைத்து கொண்டிருந்தவர்கள் தேர் கீழே சாய்வதற்கு முன்னரே நொடிப்பொழுதில் கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

தேரை நிமிர்த்தி வைக்க ஆலோசனை

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் உடனடியாக பூசாரி அமிர்தலிங்கம் உள்ளிட்ட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர். மக்கள் நடமாடும் வழியில் தேர் சாய்ந்து அப்படியே கிடப்பதால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊர்க்காரர்கள் சேர்ந்து சாய்ந்த தேரை நிமிர்த்தி வைக்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தேரிலிருந்து அம்மன் சிலையை பொதுமக்கள் எடுத்து பத்திரமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர். தேர் சாய்ந்து காயமடைந்தவர்களிடம் இரும்புலிக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேரோட்ட நிகழ்ச்சியின் போது, அச்சுமுறிந்து தேர் சாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு