சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சேலத்திற்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இந்த பஸ் இரவு 11.45 மணிக்கு வந்தடைந்தது. பின்னர், பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். சிறிது நேரத்துக்குப்பின் பஸ்சின் கடைசி இருக்கையில் பெரிய டிராவல் பேக் ஒன்று இருந்ததை கண்டக்டர் பார்த்தார். பிறகு அவர் இதுபற்றி டிரைவரிடம் தெரிவித்தார்.
பயணிகள் யாராவது அந்த பேக்கை மறந்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என 2 பேரும் நினைத்தனர். இது தொடர்பாக அவர்கள் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பஸ் நிலையத்திற்கு வந்து அந்த பேக்கில் என்ன இருக்கிறது? என சோதனையிட்டனர். அப்போது, அதில் பயங்கர வெடிப்பொருட்களான 100 டெட்டனேட்டர், 90 ஜெலட்டின் குச்சிகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் பரவியதால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வெடிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆத்தூர் பஸ் நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் பெரிய பேக்குடன் ஏறியதும், அவர் தான் வைத்திருந்த பேக்கை கடைசி இருக்கையின் கீழே வைத்து விட்டு உடனடியாக இறங்கி சென்றதும் தெரியவந்தது. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை வைத்து சென்ற நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே சமயம், பஸ்சை வெடிக்க செய்ய யாராவது பேக்கில் வெடிப்பொருட்களை வைத்து சென்றுள்ளனரா? அல்லது நாச வேலைக்கு வெடிப்பொருட்கள் கடத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பஸ்சில் வெடிப்பொருட்கள் சிக்கியது குறித்து கியூ பிரிவு போலீசார் ஆத்தூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.