கிணற்றில் மூழ்கினார்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் ரேணுகோபால் (வயது 25). மினி லாரி டிரைவர். இவர் நேற்று மதியம் ராணுவவீரரான தனது தம்பி திருமலைவாசன் மற்றும் நண்பர்களுடன் கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கிய ரேணுகோபால் மேலே திரும்பவில்லை. உடனே அவரது தம்பியும், நண்பர்களும் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கும், குடியாத்தம் டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ரேணுகோபாலை தேடினர்.
மீட்க முடியவில்லை
சுமார் 2 மணிநேர தேடுதலுக்கு பின்னும் ரேணுகோபால் கிடைக்காததால் அவரது உறவினர்கள் குடியாத்தம்- பேரணாம்பட்டு சாலையில் கன்னிகாபுரம் கிராமம் அருகே திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரும் அரக்கோணத்தில் உள்ள பேரிடர் மீட்புக் குழுவிற்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனுக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் அரக்கோணத்தில் உள்ள பேரிடர் மீட்புக் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் இன்று (திங்கட்கிழமை) மீட்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மாலை 6.30 மணி வரை மீட்பு பணியில் ஈடுபட்டனர். 50 அடி தண்ணீர் இருப்பதால் தேடுதல் பணியை நிறுத்தினர். தண்ணீரில் மூழ்கிய அவர் என்ன ஆனால் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது