மாவட்ட செய்திகள்

தேனி வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு கருப்பு துணியால் கண்களை கட்டியபடி வந்த நபரால் பரபரப்பு - 33 ஆண்டுகளாக வேலை கிடைக்காத விரக்தி

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 33 ஆண்டுகளாகியும் வேலை கிடைக்காத விரக்தியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

தேனி,

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர் கேரளபுத்திரன் (வயது 54). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து மனு எழுதிக் கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இவர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 8-ம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்.

நேற்று பதிவை புதுப்பிக்க வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் கருப்பு துணியால் கண்களை கட்டிக் கொண்டு வந்தார். பின்னர் அலுவலகத்துக்கு சென்று தனது பதிவை புதுப்பித்தார். அதன்பிறகு வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வெளியே நின்று கொண்டு இருந்த பொதுமக்களிடம் பதிவு மூப்பா? பணமா? என்ற தலைப்பில் தனக்கு வேலை கிடைக்காத விரக்தியை மனுவாக எழுதி அதை நகல் எடுத்து வினியோகம் செய்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கேரளபுத்திரன் கூறுகையில், 1985-ம் ஆண்டு எனது 8-ம் வகுப்பு கல்வி தகுதியை பதிவு செய்தேன். இதுவரை வேலை கிடைக்கவில்லை. வேலைக்காக 8 முறை கடிதம் வந்தது. எங்கும் வேலை கிடைக்கவில்லை. அழைப்புக் கடிதம் வந்த இடங்களுக்கு சென்றால் ஏற்கனவே ஆட்கள் எடுத்து விட்டதாகவும், கணக்கு காட்டுவதற்காக அழைப்பு கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் எழுதி உள்ளேன். வேலை கேட்டு பலமுறை மனு அளித்தும் கிடைக்கவில்லை. எனக்கு வேலை கிடைக்காவிட்டாலும் இனிவரும் இளைஞர்களுக்காவது பதிவுமூப்பு பயன்பெற வேண்டும் என்பதற்காகவும், வேலை கிடைக்காத விரக்தியிலும் கருப்பு துணி கட்டி வந்தேன் என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது