கோவை,
கடந்த 20.10.2016-க்கு முன்பு தனி நபர் வாங்கிய அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்தி கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கான காலக்கெடு அடுத்த மாதம் (மே)3-ந் தேதி ஆகும். அதன்படி வீட்டுமனை வாங்கிய தனி நபர்கள் ஆன்லைனில் ரூ.500 செலுத்தி விண்ணப்பித்து அதனுடன் இணையதள பதிவு ஒப்புகை நகல், மனை உரிமையாளரின் புகைப்பட அடையாள சான்று, மனைப்பிரிவு வரைபடம் மற்றும் அதில் மனை குறித்த வரைபடம், விற்பனை ஆவணம், மனை கிரையம் பெற்ற தேதியில் இருந்து விண்ணப்ப நாள் வரையிலான வில்லங்க சான்று ஆகியவற்றை உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்தில் கொடுத்தால், அவர் கள் அதை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி விடுவார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் அதற்கான வரன்முறை கட்டணம் மற்றும் அபிவிருத்தி கட்டணம் ஆகியவற்றை செலுத்தினால் அதற்கான சான்று அளிக்கப்பட்டு வீட்டுமனைகள் வரன்முறைபடுத்தப்படுகிறது.
அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த உள்ளூர் திட்டக்குழுமம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்படி சூலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்குட்பட்ட தனி நபர்கள் வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவதற்காக கடந்த 23-ந் தேதி சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 25-ந் தேதியும், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்றும் நடந்தன. மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதில் புறநகர் பகுதியில் நடந்த முகாமில் அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த ஆயிரக்கணக்கில் குவிந்தனர். சூலூரில் நடந்த முகாமில் ஆயிரத்து 417 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சர்க்கார் சாமக்குளத்தில் நடந்த முகாமில் 7 கிராமங்களில் 950 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றின் மூலம் அந்தந்த ஊராட்சிகளுக்கு வளர்ச்சி கட்டணமாக ரூ.42 லட்சத்து 67 ஆயிரத்து 886-ம், வரன்முறை கட்டணமாக ரூ.51 லட்சத்து 21 ஆயிரத்து 463-ம் வசூலிக்கப்பட்டது. 2 பேரூராட்சிகளில் 214 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.29 லட்சத்து ஆயிரத்து 660 வளர்ச்சி கட்டணமாகவும், ரூ.9 லட்சத்து 20 ஆயிரத்து 503 வரன்முறை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. சர்க்கார் சாமக்குளத்தில் நடந்த ஒரு நாள் முகாமில் வளர்ச்சி கட்டணம் மற்றும் வரன்முறை கட்டணமாக ரூ. ஒரு கோடியே 32 லட்சத்து 11 ஆயிரத்து 512 வசூலானது.
பெரியநாயக்கன்பாளையத்தில் நேற்று நடந்த முகாமில் நெ.4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மற்றும் பிளிச்சி, பன்னிமடை, குருடம்பாளையம், அசோகபுரம் ஆகிய ஊராட்சிகளில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
ஆனால் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்தில் கடந்த 24 மற்றும் 25-ந் தேதிகளில் வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான முகாம்கள் நடத்தப்பட்டன. ஆனால் அந்த 2 முகாம்களில் மொத்தமே 300 விண்ணப்பங்கள் தான் வந்துள்ளன. இதன் மூலம் மாநகராட்சி பகுதிகளில் அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாநகராட்சி ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அனுமதியற்ற வீட்டுமனைகள் புறநகர் பகுதிகளில் அதிகமாக உள்ளதால் அங்கு நடத்தப்பட்ட முகாம்களில் கூட்டம் அதிகமாக இருந்திருக்கும். அதற்காக கோவை மாநகராட்சி பகுதிகளில் அனுமதியற்ற வீட்டுமனைகள் இல்லை என்று கூற முடியாது. கோவை மாநகராட்சியோடு, கடந்த 2011-ம் ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற வீட்டுமனைகள் ஏராளமாக உள்ளன. ஆனால் இதுபற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரன்முறைப்படுத்த மாநகராட்சி ஆர்வம் காட்டவில்லை. மேலும் முகாம்கள் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் நடத்தினால் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இருந்தபோதிலும் மாநகராட்சி பகுதிகளில் நடத்தப்படும் முகாம்கள் பற்றி முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவித்து நடத்த மாநகராட்சி தவறி விட்டது.
மேலும் அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த வருகிற 3-ந் தேதி(வியாழக்கிழமை)கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மலையிட பகுதிகளான பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் தனி நபர் வாங்கிய அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவது பற்றிய வழிகாட்டுதல்களை அரசு இன்னும் வெளியிடவில்லை. எனவே அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான காலக்கெடு வருகிற 3-ந் தேதிக்கு பிறகும் நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் இதுபற்றி அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.