மாவட்ட செய்திகள்

விவசாயியை கத்தியால் குத்தி பணம் கொள்ளையடித்த 3 பேர் சிக்கினர்

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயியை கத்தியால் குத்தி ரூ.2 லட்சம் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரம்,

விவசாயியை கத்தியால் குத்தி ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த இடையகோட்டை அருகே உள்ள நாரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). விவசாயி. அவருடைய மனைவி சரோஜா. இவர்கள், அதே பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். சரோஜாவுக்கு உடல் நிலை சரியில்லாததால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று விட்டார்.

பழனிசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 29-ந்தேதியன்று 4 பேர் கொண்ட கும்பல் தோட்டத்துக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள், பழனிசாமியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். ஆனால் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பழனிசாமியை கத்தியால் குத்தினர். மேலும் மனைவியின் மருத்துவ செலவுக்காக பழனிசாமி தனது வீட்டில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் பழனிசாமியின் செல்போனையும் அவர்கள் எடுத்து சென்றனர். இதற்கிடையே கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த பழனிசாமிக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து இடையக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயமணி, பழனிசாமி, ஏட்டு நாகராஜ் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. பழனிசாமியின் செல்போனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி விசாரணையில் ஈடுபட்டனர். அவரது செல்போன் செயல்பாட்டினை போலீசார் ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் அந்த செல்போனை கொள்ளையர்கள் பயன்படுத்தவில்லை. சமீபத்தில் அந்த செல்போனில் ஒரு சிம்கார்டு பொருத்தி சிலரிடம் மட்டும் பேசி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அதன்பிறகு செல்போனில் பேசுவதை அந்த நபர் நிறுத்தி விட்டார். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக, அந்த செல்போனில் சிம்கார்டை பொருத்தி ஒருவர் பேசி வந்தார். இதனை அடிப்படையாக கொண்டு போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டது. சிம்கார்டு வாங்க கொடுத்த முகவரியை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, கரூர் மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்த ஒரு மூதாட்டி செல்போனை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த மூதாட்டியை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சித்திரைவேல் (29) என்பவர் செல்போனை கொடுத்ததாக அவர் தெரிவித்தார். அதன்பேரில் சித்திரைவேலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழனிசாமியை கத்தியால் குத்தி பணத்தை கொள்ளையடித்து விட்டு, செல்போனை பறித்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் இடையக்கோட்டையை சேர்ந்த சக்திவேல் (25), அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (19) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர், செங்கல்பட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் செங்கல்பட்டுக்கு விரைந்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்