திண்டுக்கல்,
கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 491 பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 48 ஆயிரத்து 878 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் 167 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வு மையங்களின் வளாகத்துக்குள் விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் விண்ணப்பதாரர்களும் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலை 9.30 மணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு அறைக்குள் அனுப்பப்பட்டனர்.
இதையடுத்து காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்கு புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 41 ஆயிரத்து 171 பேர் தேர்வு எழுதினர். மேலும் 7 ஆயிரத்து 707 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இந்த தேர்வை எழுதுவதற்கு சில பெண்கள் கைக்குழந்தையுடன் வந்தனர். குழந்தையை உறவினர்களின் பாதுகாப்பில் விட்டு, பெண்கள் தேர்வு எழுதினர். அதேபோல் பார்வையற்ற விண்ணப்பதாரர்கள், தேர்வு எழுதுவதற்கு வசதியாக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 25 பேருக்கு ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. இதற்கிடையே கலெக்டர் விஜயலட்சுமி திண்டுக்கல் நகரில் உள்ள தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு செய்தார். அதேபோல் துணை கலெக்டர் கள் தலைமையில் 16 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த பறக்கும் படை அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு திடீரென சென்று சோதனை நடத்தினர். மேலும் வீடியோ கேமரா மூலம் தேர்வு மைய நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டன.