மாவட்ட செய்திகள்

திருமங்கலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி செய்தவர் கைது

திருமங்கலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் டாக்டர் மற்றும் வக்கீலுக்கு வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் பெற்றுக்கொண்டு, போலி ஆவணம் கொடுத்து மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

பூந்தமல்லி,

சென்னை திருமங்கலம் பகுதியில் கிளனிக் நடத்தி வருபவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி(வயது 35). அதேபோல் எழும்பூர் நீதிமன்றத்தில் வக்கீலாக இருப்பவர் மதியரசன்(36). இவர்கள், இருவரும் அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த சுசில்ராஜ்குமார்(41) என்பவர் தான் வக்கீலாக இருப்பதாகவும், திருமங்கலம் பகுதியில் வீட்டு வசதி வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கித்தருவதாகவும் கூறி எங்களிடம் ரூ.11 லட்சம் பெற்றுக்கொண்டு போலி ஆவணம் கொடுத்து மோசடி செய்ததாக கூறி இருந்தனர்.

இதுகுறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் வழக்குப்பதிவு செய்து சுசில் ராஜ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினார்.

அதில், வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை ரூ.16 லட்சம் என்றும், அந்த வீடுகளை தான் வாங்கி தருவதாக கூறி டாக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் முன்பணமாக ரூ.7 லட்சமும், வக்கீல் மதியரசனிடம் ரூ.4 லட்சமும் என மொத்தம் ரூ.11 லட்சம் பெற்றுக்கொண்டார்.

பின்னர், அதற்கான ரசீது மற்றும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்காக அரசு சார்பில் கொடுக்கப்பட்டதுபோல் போலி ஆவணங்களையும் கொடுத்துள்ளார்.

அந்த ஆவணங்களை பெற்றுக்கொண்ட இருவரும், அதை வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் சென்று காண்பித்தனர். அதைபார்த்த அதிகாரிகள், நாங்கள் யாருக்கும் வீடுகளை ஒதுக்கவில்லை என்றும், இது போலியான ஆவணம் என்றும் கூறியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சுசில் ராஜ்குமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் அவர், இதுபோல் வேறு யாரிடமாவது மோசடி செய்து உள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சுசில் ராஜ்குமார் வக்கீல் என தெரிவித்து உள்ளதால் உண்மையிலேயே அவர் வக்கீல்தானா? எனவும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு