திருப்பூர்,
மின்னாளுமை திட்டத்தின் கீழ் வருவாய்த்துறை தொடர்பான சான்றிதழ்கள் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சான்றிதழ்கள் வேண்டி பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. பொது இ-சேவை மையத்தில் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் அதிகாரிகள் ஆன்லைன் மூலமாக பரிசீலித்து ஒப்புதல் வழங்கி வருகின்றனர். விண்ணப்பதாரர் இ-சேவை மையத்திலேயே சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொண்டு பயனடைகின்றனர்.
தற்போது செல்போன் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்புடைய அதிகாரிகளின் ஆளுமைத்திறனை மதிப்பிடுவதற்காக அரசு பல்வேறு வழிமுறைகளை கையாண்டது. இறுதியாக இ-சேவை மைய செயல்பாடுகளை கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு மதிப்பீடு வழங்கும் நடைமுறையை தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வருவாய்த்துறையின் 20 வகையான சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாத நிலவரப்படி திருப்பூர் மாவட்ட இ-சேவை மையங்களை பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்தியுள்ளதாகவும், இதனால் செயல்பாட்டில் திருப்பூர் மாவட்ட இ-சேவை மையங்கள் முதல் இடத்தை பிடித்துள்ளதாகவும் அரசு பாராட்டியுள்ளது. அதாவது மே மாதத்தில் 20 ஆயிரத்து 181 சான்றிதழ்கள் பதிவு செய்து அரசு நடத்திய சோதனை ஓட்டம் என்ற தேர்வில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
நாகப்பட்டினம் 2-ம் இடத்திலும், திருவண்ணாமலை 3-ம் இடத்திலும், நீலகிரி மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளது. வருவாய்த்துறையில் தொடர் கண்காணிப்பால் பொது இ-சேவை மையங்களில் சான்றிதழ் பெறுவது எளிதாகியுள்ளது.
மேலும், சான்றிதழ்கள் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.