திண்டுக்கல்,
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையிலான தொழிலாளர்கள் மண்பானைகளுடன் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் பொங்கல் பண்டிகையின் போது மண்பானை மற்றும் மண்அடுப்பு ஆகியவற்றை இலவசமாக வழங்கும்படி வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், தமிழகத்தில் குலாளர் சமுதாய மக்கள் 40 லட்சம் பேர் வாழ்கிறோம். அதில் 4 லட்சம் பேர் மண்பாண்ட தொழில் செய்கிறோம். இந்த தொழில் நலிவடைந்து விட்டதால் மண்பாண்டங்கள், அகல்விளக்கு, உண்டியல், அடுப்பு, தெய்வ உருவங்கள் மற்றும் பொம்மைகளை தயாரித்து விற்று வாழ்கிறோம். தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன்கார்டுதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட இலவச பொருட்களுடன் பணமும் வழங்குகிறது.
அதோடு பொங்கல் வைப்பதற்கு வசதியாக புதிய மண்பானை, மண் அடுப்பு ஆகியவற்றை அரசு இலவசமாக வழங்க வேண்டும். இதனால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். மேலும் அடுத்த மாதம் தீபாவளி, திருக்கார்த்திகை திருவிழா ஆகியவை கொண்டாடப்பட உள்ளன. இந்த நாட்களிலும் கோவில்கள், வீடு, கடைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.
அதேபோல் இந்த ஆண்டும் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவதற்கு தடையில்லா அனுமதி வழங்க வேண்டும். மேலும் நலவாரியத்தில் பதிவுசெய்த மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் மண்விளக்கு, மண்பொம்மைகள் விற்க இடம் ஒதுக்க வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.