கடலூர்,
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் கேட்ட கேள்விகளும், அதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா உள்ளிட்ட அதிகாரிகள் அளித்த பதில்களும் வருமாறு:-
மாதவன் (விவசாயி):- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு 2016-17-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க 2 தனியார் சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும். ரூ.140 கோடியில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை தரமானதாக அமைக்க வேண்டும்.
மாவட்ட வருவாய் அதிகாரி:- பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குஞ்சிதபாதம்(விவசாயி):- ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் தூர்ந்து கிடக்கும் வாய்க்கால்களை என்.எல்.சி. நிதி உதவியுடன் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள ஏரிகளையும் தூர்வார வேண்டும்.
பொதுப்பணித்துறை அலுவலர்:- வாய்க்கால், ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
சக்திவேல் (விவசாயி):- விவசாயிகளை பாதிக்காத வகையில் பண்ணை குட்டைகளை அமைக்க வேண்டும். இருக்கிற குட்டைகளை தூர்வார வேண்டும்.
மாவட்ட வருவாய் அதிகாரி:- விவசாயிகளை பாதிக்காத வகையில் பண்ணை குட்டை அமைக்கப்படும்.
தட்சிணாமூர்த்தி (விவசாயி):- ஆடு, மாடு போன்ற இலவச திட்டங்கள் எங்களுக்கு வேண்டாம். அதற்கு பதிலாக தென்பெண்ணையாற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்தால் விவசாயத்தை பாதுகாக்க முடியும். கோரையாற்றையும், தென்பெண்ணையாற்றையும் இணைத்து தடுப்பணை கட்டி மலட்டாற்றில் விட்டால் 67 கிராம விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதற்காக திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்ப வேண்டும்.
மாவட்ட வருவாய் அதிகாரி:- நல்ல திட்டம் தான். இது பற்றி பரிசீலனை செய்யப்படும்.
குமரகுரு(விவசாயி):- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடை போட, சாக்கு மாற்ற என விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூ.30 வசூல் செய்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்.
மாவட்ட வருவாய் அதிகாரி:- இது போன்ற குறைகள் களையப்படும்.
இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது. முன்னதாக கூட்டத்தை தொடங்கி வைத்து விட்டு கலெக்டர் சென்று விட்டார். பின்னர் இறுதியில் வந்து விவசாயிகளிடம் பயிர்க்காப்பீட்டு தொகை, கரும்பு விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் பற்றி பேசினார்.
கூட்டத்தில் விவசாயிகள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.