மும்பை,
மராட்டிய மேல்-சபைக்கு புனே, நாக்பூர், அவுரங்காபாத் பட்டதாரி தொகுதிகள் மற்றும் அமராவதி, புனே ஆசிரியர் தொகுதிகளில் உறுப்பினர்கள் (எம்.எல்.சி.) பதவிக்காலம் முடிந்தது.
கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களாக இந்த தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் காலியாக உள்ள இந்த 5 மேல்-சபை தொகுதிகளுக்கும் கடந்த 1-ந் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலை ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியாக சந்தித்தன. இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 2 இடங்களிலும், ஒரு இடத்தில் சிவசேனாவும் போட்டியிட்டன. எதிர்க்கட்சியான பா.ஜனதா 4 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. ஒரு தொகுதியில் சுயேச்சைக்கு ஆதரவு அளித்தது.
தேர்தலில் பட்டதாரி தொகுதிகளில் பட்டதாரி வாக்காளர்களும், ஆசிரியர் தொகுதிகளில் ஆசிரியர் வாக்காளர்களும் ஓட்டுப்போட்டு இருந்தனர். 63.89 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
ஆளும் கூட்டணி அரசின் ஒரு வருட ஆட்சி முடிந்த நிலையில், அரசை வாக்காளர்கள் ஆதரிக்கிறார்களா என்பதை கணிக்கும் தேர்தலாக இது இருந்தது. இதேபோல பெரிய கட்சியான பா.ஜனதாவுக்கு இது கவுரவ பிரச்சினையாக பார்க்கப்பட்டது. ஆளும் கூட்டணி தோல்வி அடைந்தால், இதை வைத்து ஆளும் கூட்டணி அரசை பா.ஜனதா ஆட்டிப்பார்க்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில் 5 தொகுதிகளில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டபோது, ஆளும் கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளை (காங்கிரஸ்-2, தேசியவாத காங்கிரஸ்-2) கைப்பற்றியது. சுயேச்சை ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்.
பா.ஜனதா தோல்வியை தழுவியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
அதன்படி அவுரங்காபாத் பட்டதாரி தொகுதியில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த சதீஷ் சவான் வெற்றி பெற்றார். அவர் 1 லட்சத்து 16 ஆயிரத்து 638 வாக்குகளை அள்ளினார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ஷிரிஷ் போரல்கர் 58 ஆயிரத்து 743 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
இதேபோல புனே பட்டதாரி தொகுதியையும் தேசியவாத காங்கிரஸ் கைப்பற்றியது. இங்கு அக்கட்சியை சேர்ந்த அருண் லாட் பா.ஜனதா வேட்பாளர் சங்ராம் தேஷ்முக்கை சுமார் 49 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
அதன்படி அருண் லாட் 1 லட்சத்து 22 ஆயிரத்து 145 வாக்குகளும், சங்ராம் தேஷ்முக் 73 ஆயிரத்து 321 ஓட்டுகளும் பெற்றனர்.
புனே பட்டதாரி தொகுதியில் முன்பு பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் எம்.எல்.சி.யாக பதவி வகித்தவர். அவர் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதனால் இந்த தொகுதியை பா.ஜனதா வசப்படுத்த சந்திரகாந்த் பாட்டீலும், தேவேந்திர பட்னாவிசும் தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டபோதும், தோல்வி ஏற்பட்டு இருப்பது அந்த கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல நாக்பூர், வார்தா, பண்டாரா, கோண்டியா, கட்சிரோலி, சந்திராப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நாக்பூர் பட்டதாரி தொகுதியை ஆளும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கைப்பற்றியது. அந்த கட்சியை சேர்ந்த அபிஜித் வஞ்சாரி 18 ஆயிரத்து 910 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் சந்தீப் ஜோஷியை வீழ்த்தி வெற்றி கண்டார். சந்தீப் ஜோஷி தற்போது நாக்பூர் மாநகராட்சி மேயராக உள்ளார்.
இந்த தொகுதியை பா.ஜனதா 58 வருடங்களாக தன் வசம் வைத்து இருந்த நிலையில், தற்போது தோல்வியை தழுவி உள்ளது. இந்த தொகுதியில் தற்போதைய மத்திய மந்திரி நிதின் கட்காரி பல வருடங்களாக எம்.எல்.சி.யாக பதவி வகித்துள்ளார். மேலும் நிதின் கட்காரி மற்றும் தேவேந்திர பட்னாவிசின் சொந்த ஊர் நாக்பூர் ஆகும். பா.ஜனதாவின் கோட்டையான நாக்பூர் ஆசிரியர் தொகுதி காங்கிரஸ் கைவசமாகி இருப்பது, பா.ஜனதாவிற்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.
புனே ஆசிரியர் தொகுதியில் காங்கிரசை சேர்ந்த ஜெயந்த் அசாங்கர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் தத்தாத்ரயா சாவந்த் தோல்வியை தழுவினார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அமராவதி ஆசிரியர் தொகுதியில் சிவசேனா தோல்வியை தழுவியது. சிவசேனா வேட்பாளர் ஸ்ரீகாந்த் தேஷ்பாண்டே, சுயேச்சை வேட்பாளரான கிரண் சர்நாயக்கிடம் தோல்வியை தழுவினார்.
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கைகோர்த்து தேர்தலை சந்தித்ததால் ஆளும் கூட்டணியால் அமோக வெற்றி பெற முடிந்ததாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இது ஆளும் கூட்டணி அரசின் ஒரு வருட செயல்பட்டுக்கு மக்கள் அளித்த பரிசு என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், ஆளும் கூட்டணிகள் தேர்தலை தனித்தனியாக சந்தித்து இருந்தால் நிலையை வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீலும் கருத்து தெரிவித்து உள்ளனர்.