மாவட்ட செய்திகள்

போரூர் சுங்கச்சாவடி அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

போரூர் சுங்கச்சாவடி அருகே கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

பூந்தமல்லி,

மணலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர், சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி காயத்ரி. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சுரேஷ், நேற்று தனது நண்பரின் காரை வாங்கிக்கொண்டு மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகே சென்ற போது, திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. உடனே காரை சாலையோரம் நிறுத்திய சுரேஷ், மனைவி மற்றும் பிள்ளைகளை காரில் இருந்து கீழே இறக்கும்படி கூறி விட்டு தானும் இறங்கி விட்டார்.

சிறிது நேரத்தில் புகை வந்த இடத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார், சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி விட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் காரின் முன்பகுதி முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரில் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு