கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சீசன் முடிவுக்கு வந்துவிட்டதால் தக்காளி வரத்து பெருமளவில் குறைந்து விட்டது.நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு கிணத்துக்கடவு சுற்றுவட்டாரபகுதிகளில் இருந்து 2 டன் தக்காளிகள் விற்பனைக்கு வந்தது. கடந்த வாரம் ஒருகிலோ தக்காளி ரூ.18-க்கும் ஏலம் போனது.
தற்போது தமிழகத்தில் பலபகுதிகளில் தக்காளி வரத்து குறைத்துள்ளதால் கிணத்துக்கடவு காய்கறிசந்தையில் தக்காளிகளை கொள்முதல் செய்ய உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்தவண்ணம் இருப்பதால் கிணத்துக்கடவு காய்கறிசந்தைக்கு வந்த தக்காளிகளை வியாபாரிகள் போட்டிபோட்டு ஏலம்கேட்டதால் தக்காளி விலை நேற்று கிடுகிடு வென அதிகரித்து ஒரு கிலோ ரூ.29-க்கு ஏலம்போனது.
முள்ளங்கி, கத்தரிக்காய்
இது கடந்த வாரத்தைவிட கிலோவுக்கு ரூ.11 அதிகரித்துள்ளது.இதனால் கிணத்துக்கடவு பகுதிகளில் சில்லரை கடைகளில் தக்காளி ரூ.35 முதல் 40-வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும்நேற்று நடைபெற்ற ஏலத்தில் (ஒருகிலோ) பச்சை மிளகாய் ரூ.35-க்கும், அவரைக்காய் ரூ.40-க்கும் தட்டப்பயிறு 37-க்கும், பாகற்காய் ரூ.45-க்கும், பீர்க்கங்காய் ரூ.50 -க்கும், புடலங்காய் ரூ.16-க்கும், கடந்த வாரம் 60-ரூபாய்க்கும் விற்பனையான வெண்டைக்காய்ரூ70-க்கும், விற்றது.
அதேபோல் கடந்தவாரம் ரூ.550-க்கு ஏலம் போன ஒரு சிப்பம் முள்ளங்கி ரூ. 400-க்கு விற்பனை ஆனது. கடந்தவாரத்தைபோல் இந்தவாரமும் கத்தரிக்காய் 1300-ரூபாய்க்கு ஏலம் போனது.