மாவட்ட செய்திகள்

ஊட்டியில் கோடை சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கோடை சீசனை அனுபவிக்க ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தினத்தந்தி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங் களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது. தற்போது ஊட்டியில் கோடை சீசன் களை கட்ட தொடங்கி உள்ளது. அதை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள்.

அவர்களை கவரும் வகையில் சுற்றுலா தலங்கள் அழகுபடுத்தப்பட்டு உள்ளன. பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் வார விடுமுறை என்பதாலும் ஊட்டியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகமாக இருந்தது. அங்கு மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பசுமையான மரங்களுக்கு நடுவே படகு சவாரி செய்தது சுற்றுலா பயணிகள் மனதில் ஆனந்தத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள் ஏரி கரையோரத்தில் உள்ள மான் பூங்காவில் மேய்ந்து கொண்டு இருந்த கடமான்களை கண்டு ரசித்தனர்.

ஊட்டி படகு இல்லத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பழங்கள், வாடாமல்லி மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கினர். ஊட்டி படகு இல்லத்தில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டமாகவே இருந்தது.

ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள சூட்டிங்மட்டத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உயரமான மலைப்பகுதிக்கு வளைந்து, வளைந்து செல்லும் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உள்ள மலைகள், காடுகள், மலை குன்றுகளை பார்த்து ரசித்தனர். பசுமையான புல்வெளிகளில் நின்றபடி அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சினிமா படப்பிடிப்புகள் சூட்டிங்மட்டத்தில் நடந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.

தலைகுந்தா அருகே உள்ள பைன்மரக்காடுகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. உயரமாக வளர்ந்து இருக்கு பைன் மரக்காடுகளுக்கு நடுவே சுற்றுலா பயணிகள் கீழே இறங்கி சென்று காமராஜ் சாகர் அணையில் எழில்மிகு அழகை கண்டு ரசித்தனர். மரங்களுக்கு இடையே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதேபோல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் அங்கிருந்த விதவிதமான ரோஜா பூக்களை பார்த்து ரசித்தனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்று முன்தினம் 13 ஆயிரத்து 504 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். ரோஜா பூங்காவுக்கு 6 ஆயிரத்து 108 பேர் வருகை தந்தனர். ஊட்டிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சமவெளிப்பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு, போக்குவரத்தை சரிசெய்து வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது