சென்னை,
சென்னை சைதாப்பேட்டை சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் புகழேந்தி நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை வழியாக காரில் ரோந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது சைதாப்பேட்டை அடையாறு ஆற்று பாலத்தின் கீழே சகதியில் சிக்கி 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த இன்ஸ்பெக்டர் புகழேந்தி தன்னுடைய உயிரை பொருட்படுத்தாமல், அங்குள்ள மரக்கட்டைகளை போட்டு நடந்து சென்று அப்பெண்ணை காப்பாற்றினார்.
விசாரணையில் அந்த பெண், கிண்டி நாகிரெட்டியாபட்டி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. அவரை அவரது மகன் ஆனந்தனிடம் போலீசார் ஒப்படைத்தனர். துணிச்சலாக செயல்பட்டு பெண்ணின் உயிரை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் புகழேந்தியை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், துணை கமிஷனர் விக்ரமன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.