திருப்பூர்,
திருப்பூர் பழைய பஸ்நிலையம் அருகில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பூக்களை மொத்தம் மற்றும் சில்லரையில் விற்பனை செய்து வருகிறார்கள். திருப்பூர் நகரம் ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் திருப்பூர் டவுன்ஹால், தென்னம்பாளையம் மார்க்கெட் ஆகியவை இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய பஸ்நிலையம் விரிவாக்க பணிக்காக முத்துப்புதூர் மாநகராட்சி பள்ளி இடிக்கப்பட்டுள்ளது. அதே போல பூ மார்க்கெட்டை திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள காட்டன் மார்க்கெட் வளாகத்துக்கு மாற்றி கொள்ளும்படி மாநகராட்சி உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் பூ மார்க்கெட் வியாபாரிகள் சுப்பராயன் எம்.பி. தலைமையில் மாநகராட்சி ஆணையர் மற்றும் கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தி பொங்கல் வரை இதே இடத்தில் பூ மார்க்கெட் செயல்பட அனுமதி வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாகராட்சி அதிகாரிகள் பூ மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த கட்டண கழிப்பிடத்தை பூட்டி வைத்ததுடன் குடிநீர் இணைப்பையும் துண்டித்து விட்டனர். இதனால் பூ மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் மார்க்கெட்டுக்/கு வரும் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் பூ மார்க்கெட்டில் உள்ள தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ள மேடை மற்றும் கடைகளின் முன் போடப்பட்டிருந்த தகர சீட்டுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இடிப்பதை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் கடைகளில் பூ வியாபாரத்தை நிறுத்தி விட்டு, ஒன்றாக திரண்டு வந்து பூ மார்க்கெட் அருகே காமராஜர் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு வந்த தெற்கு போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மறியலை கைவிட மறுத்ததால் அனைவரையும் கைது செய்வதாக கூறி பஸ்சில் ஏற்றினார்கள். 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பஸ்சில் ஏறிய நிலையில் அங்கு வந்த அரசியல் கட்சி நிர்வாகிகள், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம். எனவே கைது நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கூறி பஸ்சில் ஏறி இருந்தவர்களை இறங்க வைத்தனர்.
அதைத்தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி உதவி ஆணையர் சபியுல்லா, அரசியல் கட்சியினர் மற்றும் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பூட்டி வைத்துள்ள கழிப்பறையை திறந்து விட வேண்டும். சுப்பராயன் எம்.பி.யிடம் அதிகாரிகள் கூறியபடி வருகிற 20-ந்தேதி வரை கடைகளை இடிக்க கூடாது. தற்போது இங்கு கடை வைத்துள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் டோக்கன் கொடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
அப்போது பேசிய உதவி ஆணையர் சபியுல்லா, கழிப்பறையை உடனடியாக திறக்க ஏற்பாடு செய்கிறேன். மற்ற கோரிக்கைகளை ஆணையாளரிடம் தெரிவிக்கிறேன் என்றார். இதனால் சமாதானம் அடைந்த வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பரபரப்பு முடிவுக்கு வந்தது.