திருப்பூர்,
ஈரோடு ஜவுளி சந்தைதிருப்பூரில் ஆடை தயாரிப்புக்கு பெயர் பெற்றது காதர்பேட்டை. இங்கு ஏராளமான சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் உள்ளன.. இந்த கடைகள் மூலம் ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தினமும் வெளிமாநிலம், வெளிமாவட்டம் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து ஆடைகளை வாங்கி செல்கிறார்கள்.
இதுபோல் திருப்பூரின் அருகில் உள்ள மாவட்டமான ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஜவுளிச்சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கும் சென்று திருப்பூர் ஆடை தயாரிப்பாளர்கள் ஆடைகளை விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நடந்த ஜவுளிச்சந்தைக்கு திருப்பூரில் இருந்து ஆடை தயாரிப்பாளர்கள் ஆடைகளை விற்பனைக்கு கொண்டு செல்ல ஆர்வம் காட்டவில்லை.
இது குறித்து ஆடை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பிற்கு பிறகு வெளிமாநிலங்கள், வெளிபகுதிகளில் இருந்து ஈரோடு ஜவுளிச்சந்தைக்கு அதிகளவு வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக சில வாரங்களாக ஆடைகளை விற்பனைக்கு கொண்டு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம். இந்த நிலையில் தற்போது பண்டிகை சீசன் ஏதும் இல்லை. இனிமேல் கோடை காலம் ஆரம்பித்தவுடன் கோடை கால ஆடைகள் தான் விற்பனை செய்யப்படும்.
அதுவரை ஆடைகளை அங்கு கொண்டு சென்று, விற்பனையாகாமல் திரும்பவும் திருப்பூருக்கு கொண்டு வருவதற்கு போக்குவரத்து செலவு தான் அதிகம் ஆகும். இந்த காரணங்களால் தான் ஈரோடு ஜவுளிச்சந்தைக்கு ஆடைகளை விற்பனைக்கு கொண்டு செல்ல பல வியாபாரிகள் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். ஏப்ரல், மே மாதங்களில் பலர் விற்பனைக்கு கொண்டு செல்வார்கள் என்று அவர்கள் கூறினார்கள்.