ஊட்டி,
ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகில் பாறை முனீஸ்வரர் கோவிலையொட்டி நடைபாதை உள்ளது. பஸ்களில் இருந்து இறங்கும் பயணிகள் நடைபாதை வழியாக ராமகிருஷ்ணபுரம், வுட் லண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்து செல்கின்றனர். மேலும் தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், கூலி வேலைக்கு செல்கிறவர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், பொதுமக்கள் என பலரும் அந்த நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுதவிர கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பஸ்களை பிடிக்க தவறி விட்டால், பயணிகள் விரைந்து சென்று பஸ்சில் ஏற அந்த நடைபாதை பெரிதும் பயன்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபாதையில் புதர்ச்செடிகள் ஆக்கிரமித்து இருந்தன. மேலும் இரவு நேரங்களில் நடைபாதையில் உள்ள படிக்கட்டுகளில் மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்தி விட்டு காலி மதுபாட்டில்களை தூக்கி எறிந்த சம்பவங்கள் நடைபெற்றது உண்டு. இதனால் பாட்டில் துண்டுகள் பொதுமக்களின் கால்களை பதம் பார்த்தன.
நடைபாதையில் மது அருந்தும் சம்பவத்தால் பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக் கப்பட்டனர். அப்பகுதியில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் நிகழ்வும் நடந்தது. இதனால் கடும் தூர்நாற்றம் வீசியதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து சென்றவர்கள் துணியால் மூக்கை பொத்தியபடி நடந்து சென்றனர். அதனை தொடர்ந்து நடைபாதையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக் கப்பட்டது. இதையடுத்து ஊட்டி நகராட்சி நிர்வாகம் நடைபாதையில் புதர்ச்செடிகளை அகற்றியது.
மேலும் நடைபாதையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு, சுவரில் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கக்கூடாது என்று விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. மேலும் சிறுநீர் கழிப்பதை தடுக்க நடைபாதை ஓரத்தில் கடைகள் வைக்கப்பட்டன. ஆனால் அந்த கடைகள் இன்று வரை வாடகைக்கு விடப்படவில்லை. இதனால் கடைகளின் ஒதுக்குப்புறமாக தற்போதும் இரவில் நடைபாதை மது பாராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுநீர் கழிக் கும் சம்பவங்களும் தொடர்ந்து நடக்கிறது.
இந்த நிலையில் அந்த நடைபாதையில் ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பேனர் ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. அதில் பெண்கள், குழந்தைகள் நடக்கும் நடைபாதையில் யாராவது சிறுநீர் கழித்தாலோ அல்லது அசுத்தம் செய்தாலோ கடுமையாக தண்டிக்கப்படுவதுடன், உடனடியாக ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. நகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இருந்தாலும், கடைகளை வாடகைக்கு விட்டால் அப்பகுதியில் அசுத்தம் செய்வது, மது அருந்துவது குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.