மாவட்ட செய்திகள்

அமெரிக்கா, மஸ்கட்டில் இருந்து 324 பேர் சென்னை வந்தனர்

அமெரிக்கா மற்றும் மஸ் கட்டில் இருந்து 324 பேர் சிறப்பு விமானத்தில் சென்னை வந்தனர். கொரோனா பரிசோதனைக்கு பிறகு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டது. தமிழகத்தில் தங்கி இருந்த வெளிநாட்டு பயணிகள் அவர்களது சொந்த நாட்டுக்கு சிறப்பு விமானங்கள் மூலமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதேபோல் ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை சொந்த நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தின் மூலம் 60-க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.

அதன்படி துபாய், குவைத் மற்றும் மலேசியாவில் இருந்து சென்னைக்கு இயக்கிய 4 சிறப்பு விமானங்களில் 710 பேர் அழைத்து வரப்பட்டு தனியார் கல்லூரி மற்றும் ஓட்டல்களில் 14 நாள் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் அமெரிக்காவில் சிக்கி தவித்தவர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு விமானம் மும்பை வழியாக சென்னை வந்தது. இந்த விமானத்தில் 6 குழந்தைகள், 48 பெண்கள் உள்பட 141 பேர் வந்தனர். அதேபோல் மஸ்கட்டில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் 27 குழந்தைகள், 50 பெண்கள் உள்பட 183 பேர் வந்தனர்.

இவர்களுக்கு குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை முடிந்த பின்னர் விமான நிலையத்திலேயே தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலமாக 324 பேரும் சென்னை மற்றும் புறநகரில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் ஓட்டல்களில் தனிமைப்படுத்த அழைத்துச்செல்லப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில் இவர்கள் யாருக்காவது கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும். தொற்று இல்லாதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்து பின்னர் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் தமாமில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கொச்சி வந்த சிறப்பு விமானம் பயணிகளை கொச்சியில் இறக்கிவிட்டு சென்னை வந்தது. இந்த விமானத்தில் வந்த விமானி, ஊழியர்கள் உள்பட 14 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு