தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் புரெவி புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பரசுராமன், பால்வள தலைவர் காந்தி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். இதில் மழைக்கு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், 3 கால்நடைகளை இழந்தவர்களின் உரிமையாளர்களுக்கு ரூ.85 ஆயிரமும் வழங்கப்பட்டது.
ரூ.15 லட்சம் நிவாரணம்
மேலும் வீடுகளை இழந்த 234 பேரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சத்து 48 ஆயிரத்து 600 என மொத்தம் 238 பேருக்கு ரூ.15 லட்சத்து 33 ஆயிரத்து 600 நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், மொத்த நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் ரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாமிவேல், கல்வி புரவலர் நாகத்திகலியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.