வாழப்பாடி,
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் மதுரைவீரன், கூலித்தொழிலாளி. இவருடைய மகள் காயத்திரி (வயது 19). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், காயத்திரியை நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும், வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் காலனியை சேர்ந்த 54 வயதான துரைசாமி என்பவர் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் காலை பழனியாபுரத்தில் உள்ள துரைசாமி வீட்டில் இளம்பெண் காயத்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது தாயார் வசந்தி (37) வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் தீராத வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காயத்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
54 வயது ஆசிரியரை திருமணம் செய்து கொண்ட 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட இந்த பரிதாப சம்பவம் குறித்து, வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் பரிந்துரையின் பேரில், வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சூர்யமூர்த்தி மற்றும் சேலம் வருவாய் கோட்டாட்சியர் செழியன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.