வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே கரூர் மாவட்ட எல்லையில் ரெங்கமலை அமைந்துள்ளது. இந்த மலையில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அந்த சமயங்களில் போர் விமானங்கள் பறந்து சென்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த 21-ந் தேதி மீண்டும் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.
இந்தநிலையில் நேற்று மாலை 3.50 மணி அளவில் மீண்டும் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இந்த வெடிச்சத்தம் வேடசந்தூர், எரியோடு,கோவிலூர், குஜிலியம்பாறை, அழகாபுரி, கல்வார்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராம பகுதிகளில் கேட்டது.
இந்த பயங்கர வெடிச்சத்தம் கேட்ட அடுத்த வினாடியே நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று வீடுகள் குலுங்கின. ஒரு சில வினாடிகள் நீடித்த அந்த அதிர்வால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சத்தில் வெளியே ஓடினர். மேலும் சிறிது நேரத்தில் அந்த அதிர்வு நின்றது. எனினும், பயத்தில் இருந்த மக்கள் உடனே வீட்டுக்குள் செல்லவில்லை.
வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி பயங்கர வெடிச்சத்தம் கேட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய விளக்கம் அளித்து அச்சத்தை போக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.