மாவட்ட செய்திகள்

பஸ்கள் கூட செல்ல முடியாத வகையில் குண்டும் குழியுமான வேலூர் புதிய பஸ் நிலையம்

வேலூர் புதிய பஸ் நிலையம் குண்டும் குழியுமாக மாறி பஸ் போக்குவரத்துக்குக்கூட பயன்படாத வகையில் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

வேலூர்,

வேலூர் மாநகராட்சி சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதனால், வேலூர் வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வேலூரில் தங்க கோவில், சி.எம்.சி. மருத்துவமனை, வி.ஐ.டி. ஆகியவை இருப்பதன் காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது.

வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் நகரின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது. மேலும் ஸ்மார்ட் சிட்டி, மாடல் சிட்டி திட்டங்களிலும் வேலூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டங்களில் வேலூர் மாநகராட்சியின் தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வேலூரில் இருந்து வேலூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வேலூர் புதிய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். ஆனால் அதற்கு ஏற்ப புதிய பஸ் நிலையம் இல்லை. மழை பெய்தால் பயணிகள் ஒதுங்குவதற்குக்கூட போதுமான இடவசதி இல்லை.

தற்போது வேலூர் புதிய பஸ் நிலையம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பஸ் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாகவே காட்சி அளிக்கிறது.குறிப்பாக பாகாயம்-காட்பாடி இடையே இயக்கப்படும் பஸ்கள் வந்து நின்று செல்லும் பகுதியில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. மழை நேரத்தில் இங்கு வெள்ளம்போல் தண்ணீர் தேங்குகிறது.

மழையில்லாத நேரத்தில் ஓட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. இதன் வழியாக இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோ போன்ற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. வேறு வழியில்லாமல் பஸ்கள் சென்று வருகின்றன. பல மாதங்களாக இந்த நிலை நீடித்தாலும், மாநகராட்சி அதிகாரிகள் இதை கண்டு கொள்வதாக தெரியவில்லை.

இந்த பகுதியில் பஸ்சுக்காக பயணிகள் காத்திருக்கும்போது வரும் பஸ்கள் இந்த பள்ளத்தில் இறங்கும்போது அதில் தேங்கி நிற்கும் கழிவுநீர் பயணிகள் மீது படுகிறது.

இதுதவிர பஸ் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் இருந்து தூர்வாரப்படும் கழிவுகள் அங்கேயே குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும் குழியுமான புதிய பஸ் நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது