திட்டச்சேரி:
நாகை மாவட்டத்தில் விடிய, விடிய கன மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாரான 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன.
விடிய, விடிய கன மழை
நாகை மாவட்டம் திருமருகல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த மாதம்தொடர் மழை பெய்தது. இதில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின.இதைதொடர்ந்து மழை நின்றவுடன் வயல்களில் தேங்கியிருந்த மழைநீரை விவசாயிகள் வெளியேற்றி விவசாய பணிகளை மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து பகலில் வெயிலும், இரவில் கடும் பனிப்பொழிவும் நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமருகல், திட்டச்சேரி, அம்பல், போலகம், திருக்கண்ணபுரம், கங்களாஞ்சேரி, குத்தாலம், நரிமணம், பனங்குடி பகுதிகளில் திடீரென கன மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
குளம்போல் தண்ணீர் தேங்கியது
மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இந்த மழையால் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா நெற்பயிர்கள் சேதம் அடையும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகையில் நேற்று அதிகாலை முதல் கன மழை பெய்தது. இந்த மழை 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. அதிகாலை நேரத்தில் மழை பெய்ததால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதேபோல் நாகூர் சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்தது.
கீழையூர்-கீழ்வேளூர்
வேளாங்கண்ணி, திருக்குவளை, கீழையூர், திருப்பூண்டி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் வாகனங்களில் சென்றவர்கள் நனைந்தப்படி பணிக்கு சென்றனர்.அறுவடைக்கு தயாரான சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாய்ந்தன.
கீழ்வேளூர், தேவூர், வடகரை, கோகூர், ஆனைமங்கலம், நீலப்பாடி, அத்திப்புலியூர், குருமணாங்குடி, குருக்கத்தி, கூத்தூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை, கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, வலிவலம் மற்றும் சிக்கல், ஆழியூர், அகரகடம்பனூர், சங்கமங்கலம், ஆவராணி, புதுச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.
நெற்பயிர்கள் சாய்ந்தன
இந்த மழையால் கீழ்வேளூர் ஒன்றியம் 105 மானலூர், கிள்ளுக்குடி, கூரத்தாங்குடி. ஆந்தக்குடி, காக்கழனி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.